Published : 09 Jul 2018 09:13 AM
Last Updated : 09 Jul 2018 09:13 AM

மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மருத்துவர்கள் கிராமங்களில் 3 ஆண்டுகள் பணிபுரிவதை கட்டாயமாக்க வேண்டும்- குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

மருத்துவர்கள் கிராமப்புறங்க ளில் குறைந்தபட்சம் 3 ஆண்டு கள் பணிபுரிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் தின் 30-வது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறந்த மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்தியாவில் 479 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் 227 மருத்துவக் கல்லூரிகளை அரசு நடத்துகிறது. 252 தனியார் கல்லூரிகளாகும். இவற்றில் ஆண்டுக்கு 67,532 எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், 31,415 முதுநிலை படிப்புக் கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதுதவிர முதுகலை மருத்துவப் படிப்புக்கு இணை யான டிஎன்பி-யில் 6 ஆயிரத்து 848 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தால் மேற்கண்ட மருத்துவப் படிப்புகளின் மாணவர் சேர்க்கை இரட்டிப்பாக்கப்பட வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும்.

மருத்துவம் என்பது புனிதமான பணி. நவீன மருத்துவ வசதிகள் கிராமங்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கு மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கொடுப்பதற்கு முன்பு அவர்கள் கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.

அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு “ஆயுஷ் மான் பாரத்” எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத் தைத் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், 10 கோடி ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி பேர் பயன்பெறுவார்கள். ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இதனால் ஏழை மக்களின் நிதிச்சுமை பெருமளவு குறையும். தமிழ்நாட்டில் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

முன்னதாக, மிகச் சிறந்த மருத்துவ மாணவ, மாணவிகள் 76 பேருக்கு தங்கப் பதக்கம், 25 பேருக்கு நினைவு அறக்கட்டளையின் வெள்ளிப் பதக்கம், 63 பேருக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிப் பதக்கங்களையும் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

இப்பட்டமளிப்பு விழாவில், மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ், மருத்துவம் சார்ந்த படிப்புகள் முடித்த 20 ஆயிரத்து 372 பேர் பட்டங்கள் பெற்றனர். தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சே.கீதாலட்சுமி ஆகியோர் பேசினர். அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x