Published : 09 Jul 2018 08:03 AM
Last Updated : 09 Jul 2018 08:03 AM

மத்திய அரசு வழிகாட்டும் மதிப்பீட்டில் இருந்து சென்னை - சேலம் புதிய 8 வழிச்சாலை திட்ட மதிப்பீடு வேறுபடுவது ஏன்?- மூத்த பொறியாளர் சங்கம் கேள்வி

சென்னை - சேலம் வரையில் புதியதாக அமைக்கவுள்ள சாலை திட்டத்தின் மதிப்பீடு மத்திய அரசு வழிகாட்டு மதிப்பீட்டிலிருந்து பெரிதும் வேறுபடுவது ஏன் என்று மூத்த பொறியாளர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,இத்திட்டத்தின் சிறப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து உண்மை நிலவரத்தைக் கண்டறிய நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டுமென்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சேலம் செல்வதற்கு, ஏற்கெனவே வேலூர்- கிருஷ்ணகிரி வழியாகவும் மற்றும் செங்கல்பட்டு – உளுந்தூர்பேட்டை வழியாகவும் இரண்டு வழித்தடங்கள் உள்ளன. தற்போது சென்னை - திருவண்ணாமலை - அரூர் வழியாகப் புதிதாகத் தடம் அமைக்கப்படுவதால் ‘கிரீன் காரிடர்’ என்று அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் பொருளாதார ரீதியாகச் சாத்தியமா? அவசியம்தானா? என்று பார்க்க வேண்டும்.

நிபுணர் குழு

தொழில்நுட்ப ரீதியாக எந்தச் சங்கடங்களும் இல்லாமல் இந்த திட்டத்தினைச் செயற்படுத்த இயலுமா என்றும் பார்க்க வேண்டும். மேலும், இத்திட்டத்தின் சிறப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆராய பொறியியல் நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டுமென பொறியாளர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் மற்றும் மூத்த பொறியாளர் சங்க மாநில செயலாளருமான அ.வீரப்பன் கூறியதாவது:

12-வது திட்டக் கமிஷன் சொல்வது என்னவென்றால், சாலைகள் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்திட ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டும். அதில், மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை, சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, போக்குவரத்து பொறியியல் ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள், மாநில நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் ஆகியோர் இடம்பெற வேண்டும். இந்தக் குழு, திட்டங்களை வரிசைப்படுத்தி அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டமிடலில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தனியார் ஆலோசகர்களே தயாரித்ததாகத் தெரிகிறது.

1,000 லட்சம் வாகனங்கள்

இதுபோன்ற அறிவியல் பூர்வ அணுகுமுறை ஏதுமின்றி, திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படும்போது அவற்றால் அதிக அளவில் பயன் இருக்குமென்று சொல்லமுடியாது. 8 வழிச் சாலைக்கு - 10 ஆண்டுகளில் 100MSA என்று சொல்லப்படும் 1,000 லட்சம் வாகனங்கள் (ஒரு நாளைக்கு ஏறக்குறைய 20,000 வாகனங்கள் ) சாலையில் செல்ல வேண்டும். இதில் நான்கில் ஒரு பங்குகூட இந்தப் புதிய சேலம் 8 வழி பசுமைச் சாலையில் செல்லுமா என்பதே சந்தேகமே.

ஏற்கனவே, சேது சமுத்திரத் திட்டத்துக்குச் செலவழித்த பெருந்தொகை என்னவாயிற்று? புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச்சாலை கடந்த 2009-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் நான்கு வழிச் சாலைக்குத் தேவையான குறைந்த அளவு வாகன போக்குவரத்துகூட இன்றியும், மக்கள் ஆதரவின்றியும் பெரும்பாலான நேரங்களில் சாலை வெறிச்சோடியே காணப்படுகிறது.

மக்கள் பணம் வீண்

மக்கள் பணம்தான் வீணானது. சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சென்னை - பெங்களூரு சாலையில் 6 வழித்தடம், தாம்பரம் முதல் திண்டிவனம் வரை பறக்கும் 6 வழித்தடம், திருச்சி - கரூர் சாலையில் திருச்சிக்கான புறவழிச் சாலை, சென்னை - திருப்பதி சாலையில் திருவள்ளூர் புறவழிச் சாலை, புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலை உட்பட பல்வேறு திட்டங்கள் இன்னும் முடிக்கப்படாமலே உள்ளன. இவற்றை முடிக்க தமிழக அரசு முனைப்பு காட்டவில்லை. ஆனால், சேலம் 8 வழி பசுமைச் சாலைக்கு மட்டும் அரசு இயந்திரம் இவ்வளவு வேகமாகச் செயற்படுவது ஏன்?.

அரசு அமைக்கவுள்ள சென்னை - சேலம் புதிய வழித்தடத்தின் அவசியத்தினை நிபுணர்கள் யாரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது ஒரு புறமிருக்க, அதற்குத் திட்ட மதிப்பீடு மத்திய அரசு வழிகாட்டும் மதிப்பீட்டிலிருந்தே பெரிதும் வேறுபடுகிறது என்பது சந்தேகத்தைத் தருகிறது. மேலும், 2018-2019-ம் ஆண்டுக்கு மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள தோராய மதிப்பீடு அதிகபட்சமாக, எட்டுவழி, ‘கிரீன் காரிடர்’ அலைன்மென்ட்டுக்கு ஒரு கிமீ.க்கு ரூ.10.17 கோடிதான். ஆக 277.30 கிமீ நீளமுள்ள கிரீன்பீல்டு சாலைக்கு ரூ.2,820 கோடிதான்.

நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றுக்கு இன்னொரு ரூ.3,000 கோடி என்றும், பாலங்கள் கட்டுமானம் போன்ற பிற பணிகளுக்கு ரூ.1,000 கோடி என்றும் வைத்துக் கொண்டாலும், இந்த சென்னை - சேலம் சாலைக்கான பணிகள் மொத்தமும் ரூ.7,000 கோடி மட்டுமே.

விவசாய நிலங்கள் பாதிக்காமல், விலையுயர்ந்த இரும்பு தாதுப் பொருள் உடைய எட்டு மலைகளை ஒட்டு மொத்தமாக பாதிக்காமல் அருகில் 1 அல்லது 2 கிமீ தொலைவில் உள்ள மாவட்டச் சாலைகளின் வழி கொண்டு செல்ல முயற்சிக்கலாமே? இவ்வளவு பெரிய திட்டத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒத்திசைவு பெறப்படவில்லையே ஏன்? எனவே, இத்திட்டத்தின் சிறப்புகள் மற்றும் பாதிப்புகளை ஆராய்ந்து உண்மை நிலவரத்தைக் கண்டறிய நெடுஞ்சாலை நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x