Last Updated : 09 Jul, 2018 07:56 AM

 

Published : 09 Jul 2018 07:56 AM
Last Updated : 09 Jul 2018 07:56 AM

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை கண்காணிக்க 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: ஆலோசனை வழங்கி பணிகளை விரைவுபடுத்தவும் உத்தரவு

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணிகளைக் கண்காணிக்க வேளாண்துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீர்நிலைகளை, பயனாளிகள் ஒத்துழைப்புடன் மீட்டெடுக்க குடிமராமத்து திட்டத்துக்கு தமிழக அரசு மீண்டும் உயிரூட்டியுள்ளது. கடந்த 2016-17-ல் ரூ.100 கோடியில், 1,519 பராமரிப்புப் பணிகள் 30 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இதில், 1,513 பணிகள் முடிக்கப்பட்டன. மேலும், 6 ஆறு பணி கள் பல்வேறு காரணங்களால் கைவிடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2017-18-ம் ஆண்டுக்கு முதலில் ரூ.300 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரிகள் அமல் படுத்தப்பட்டன. எனவே, புதிய விலைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஏரிகளை முழுமையாக புனரமைப்பதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி ரூ.328 கோடியே 95 லட்சத்தில் 29 மாவட்டங்களில் 1,511 பணிகளை மேற்கொள்வதற்கான திருத்திய மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. இதற்கு சமீபத்தில் அரசு, நிர்வாக ஒப்புதலை வழங்கியது.

1,511 பணிகள்

இதன்படி, திருப்பூரில் 159, நெல்லையில் 144, மதுரையில் 128, சிவகங்கையில் 104 பணிகள் உட்பட 1,511 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரப் பிரிவின் 15 வட்டங்களுக்கு உட்பட்ட அதி காரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த ஜூன் 15-ம் தேதி தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், குடிமராமத்து திட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிலையில், நீர்வள ஆதாரப் பிரிவின் 15 வட்டங்களிலும் குடிமராமத்து பணிகளைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்ணையாறு மற்றும் வெள்ளாறு வடிநில வட்டத்துக்குட்பட்ட தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வேளாண்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், வேலூர் திட்டப்பகுதிக்குட்பட்ட வேலூர், பாலாறு வடிநில வட்டத்துக்குட்பட்ட காஞ்சிபுரம், திருவண்ணாமலையின் ஒருபகுதி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் பி.அமுதா, பெரியாறு - வைகை மற்றும் கீழ் வைகை வடிநில வட்டத்துக்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் ஒரு பகுதி மற்றும் சிவகங்கை ஒரு பகுதிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வைப்பாறு, தாமிரபரணி வடிநில வட்டத்துக்குட்பட்ட மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட பகுதிகளுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ, மேல் காவிரி மற்றும் சிறப்பு திட்ட வட்டத்துக்குட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், திண்டுக்கல் பகுதிகளுக்கு திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைச் செயலர் ஆஷிஷ் வச்சானியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய காவிரி, கீழ் காவிரி வடிநில வட்டத்துக்குட்பட்ட திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களுக்கு தேசிய சுகாதார திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது, பவானி மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு வடிநில வட்டத்துக்குட்பட்ட ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை மாவட்ட பகுதிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறைச் செயலர் கே.கோபாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கலான நேரத்தில் தீர்வு

இவர்கள், குடிமராமத்துப் பணிகளில் விவசாய சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர்கள் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். திட்டப்பணிகளைக் கண்காணிப்பதுடன், தேவையான நேரத்தில் ஆலோ சனைகளையும், சிக்கலான நேரத்தில் தீர்வுகளையும் வழங்கி, பணிகள் விரைவாகவும், சிறப்பாகவும் நடப்பதையும், நிர்ணயிக்கப்பட்ட பணிகள் முடிவதையும் உறுதி செய்ய வேண்டும்.

இதுதவிர, அணைகள், நீர்த்தேக்கங்களைப் பார்வையிட்டு, பருவமழையின்போது, மதகுகள் திறப்பதற்கு நல்ல நிலையில் உள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு, அந்தந்த வட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் அவ்வப்போது முடிக்கப்பட்ட பணிகள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு, இதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x