Published : 09 Jul 2018 07:38 AM
Last Updated : 09 Jul 2018 07:38 AM

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல்: வீடு, குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் அனுப்பியவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக உள்ள தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள், கடந்த ஆண்டில் ஆளுநரை சந்தித்து, முதல்வர் கே.பழனிசாமியை மாற்றக்கோரி மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். பேரவைத் தலைவரின் உத்தரவை எதிர்த்து 18 எம்எல்ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல மாதங்களாக வழக்கு விசாரணை நீடித்தது. பின்னர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். ‘18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த பேரவைத் தலைவரின் உத்தரவு சரியே’ என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறிப்பிட்டார். ஆனால், ‘பேரவைத் தலைவரின் உத்தரவில் உள்நோக்கம் உள்ளது. எனவே, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த உத்தரவு செல்லாது’ என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார். இதையடுத்து, இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தற்போது 3-வது நீதிபதியாக சத்தியநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது விசாரணையை கடந்த 4-ம் தேதி தொடங்கினார். வழக்கை 23-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று முதல் 27-ம் தேதி வரை தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

மிரட்டல் கடிதம்

இந்நிலையில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி சுந்தர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. எங்கிருந்து அனுப்பப்பட்டது, யார் அனுப்பியது என்ற எந்த விபரமும் அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதில், நீதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு நீதிபதி சுந்தர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, இந்திரா பானர்ஜி தரப்பில் இருந்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிபதி சுந்தருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முழு அளவில் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உறுதி அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியவரை பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மிரட்டல் கடிதம் அனுப்பியவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி சுந்தர் வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீஸார் அவரது வீட்டைச் சுற்றி ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்கள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதத்தின் பின்னணியில் அரசியல் தொடர்பு உடையவர்கள் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீதிபதி சுந்தர், அவரது குடும்பத்தினர் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சாதா ரண உடையிலும் போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x