Published : 06 Jul 2018 10:19 PM
Last Updated : 06 Jul 2018 10:19 PM

தனது தொகுதிக்குள் எம்.பி. நுழைய எப்படி தடை விதிப்பீர்கள்?- அன்புமணிக்கு தர்மபுரியில் அனுமதி மறுத்ததற்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தர்மபுரி தொகுதிக்குள் செல்ல அன்புமணி ராமதாஸுக்கு தடை விதித்ததற்கு சொந்தத் தொகுதியில் நுழைய ஒரு எம்.பி.க்கு எப்படி தடை விதிக்கிறீர்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை அமைப்பதற்கு தமிழக அரசு மக்கள் எதிர்ப்பை மீறி விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. எதிர்த்துப் போராடுபவர்களை கைது செய்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அரசு தொடங்கியுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முயற்சியை எதிர்த்து வரும் வேலையில் பாமகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடத்தி வருகிறது. சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்தக் கூட்டங்களை நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.

ஆனால், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற எம்.பி.யாக இருக்கும் அவரது சொந்த தொகுதியான தர்மபுரியில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதற்கு அனுமதி வழங்கக் கோரி, பாமகவின் துணை பொதுச் செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கிற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. எனவே, ஜூலை முதல் வாரத்தில் தர்மபுரி மாவட்டம் அரூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யான அன்புமணி ராமதாஸைஅவர் சொந்த தொகுதியினுள் செல்ல அரசு எவ்வாறு தடை விதிக்க முடியும்? பொதுமக்களிடம் கருத்து கேட்பதை அரசு தடுப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, தர்மபுரி எம்.பி.யான அவர் தொகுதிக்குள் செல்ல அனுமதி கோர அவசியமில்லை, என தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x