Published : 06 Jul 2018 06:45 PM
Last Updated : 06 Jul 2018 06:45 PM

கருத்து சுதந்திரம், ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது: கே.பாலகிருஷ்ணன்

அரசியல் சாசனப்பிரிவு 19 உறுதி செய்யும் பேச்சுரிமை, கருத்துரிமை போன்றவற்றின் மீது பேரிடியாக உயர் நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை -சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கே.வி. சுசீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் அதற்குக் கூறியுள்ள காரணங்கள் அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

அரசு முன்மொழியும் திட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டவும், எதிர்த்து இயக்கம் நடத்தவும் இந்திய அரசியல் சட்டம் உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கிற உரிமை அனைவருக்கும் உண்டு.

குறிப்பாக, ஏற்கெனவே மூன்று நெடுஞ்சாலைகள் சேலத்திற்கும், சென்னைக்கும் இடையில் உள்ள நிலையில் நான்காவது ஒரு சாலை தேவையற்றதாகும். இத்தகைய சாலைக்கு சாதாரண ஏழை விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்துவது, கிராமங்கள், நகரங்களில் வீடுகளைத் தரைமட்டமாக்குவது என பல்லாயிரக்கணக்கான மரங்கள், கிணறுகள், நீர்நிலைகள் அழிக்கப்படவுள்ளன.

மேலும் இச்சாலை விரைவுச்சாலை (Express Way) என்ற வகையில் அமைக்கப்படவுள்ளதால் சாலையின் ஒருபக்கத்தில் உள்ளவர்கள் அடுத்த பக்கத்தில் உள்ள மக்களைச் சந்திக்க சில கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும் போன்ற பல பாதிப்புகள் உள்ளன.

ஒரு ஏக்கர் 30 லட்சம் விலை உள்ள நிலத்தை மிகக் குறைவான நஷ்ட ஈடு கொடுத்து கையகப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற எண்ணற்ற பாதிப்புகளை உருவாக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பேசக்கூடாது, பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது என்ற வகையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதற்காக வழக்கு போடப்பட்டிருந்தால் இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழங்கப்படும் தீர்ப்பானது திட்டத்தின் சாதக பாதக அம்சங்களை ஆராயலாம். போடப்பட்ட வழக்கு பொதுக்கூட்டதிற்கு அனுமதி கேட்டு மட்டுமே, திட்டத்தின் தகுதி குறித்து அல்ல. இந்நிலையில் மனுவின் வரையறையைத் தாண்டி திட்டத்திற்கு நற்சான்றிதழ் அளிப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதாக இல்லை.

மேலும் அரசியல் சாசனப் பிரிவு 19 உறுதி செய்யும் பேச்சுரிமை, கருத்துரிமை போன்றவற்றின் மீது பேரிடியாக விழுந்துள்ளது. இத்தீர்ப்பை பயன்படுத்தி அரசின் திட்டங்களை எதிர்த்து குரலெழுப்புகிற அடிப்படை உரிமையை காவல்துறை தமிழகம் முழுவதும் பறித்து விடும் வாய்ப்பு உள்ளது.

இந்த அபாயத்தை எதிர்த்து போராட வேண்டுமெனவும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கேட்டுக் கொள்கிறது'' என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x