Published : 06 Jul 2018 06:40 PM
Last Updated : 06 Jul 2018 06:40 PM

பாரதிராஜாவின் மகன் மனோஜ் மது போதையில் கார் ஓட்டி சிக்கினார்: போலீஸ் வழக்குப் பதிவு

 மது போதையில் தனது பி.எம்.டபிள்யூ காரை ஓட்டிவந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து காரைப் பறிமுதல் செய்தனர்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் 'தாஜ்மஹால்' படம் நாயகனாக சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் 'சமுத்திரம்', 'அல்லி அர்ஜுனா', 'கடல்பூக்கள்', 'வருஷமெல்லாம் வசந்தம்',' பல்லவன்',' ஈரநிலம்', ’அன்னக்கொடியும் கொடி வீரனும்', 'பேபி' ஆகிய படங்களில் மனோஜ் நடித்தார்.

மனோஜ் தற்போது தி.நகரில் வசிக்கிறார். நேற்று நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை வழியாக தனது பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இடையில் வாகன சோதனையில் போலீஸார் அவரை மடக்கினர்.

மது போதையில் இருந்த மனோஜை காரைவிட்டு கீழே இறக்கி மது அளவிடும் கருவியால் சோதித்தனர். இதில் அளவுக்கு அதிகமாக (53 சதவிகிதம்) மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் கேட்டபோது அவர் அசல் உரிமத்தை வைத்திருக்காததாலும் மது போதையில் வாகனத்தை ஓட்டியதாலும் அவருக்கு ரூ.2500 அபராதம் விதித்தனர்.

அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரின் அசல் ஆவணங்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அபராதம் செலுத்திய பின்னர் அவைகள் ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். முதன்முறை என்பதால் அவரது ஓட்டுநர் உரிமத்தில் சிவப்புப் புள்ளி ஒன்று பதிவிடப்படும், அடுத்தமுறை சிக்கினால் ஆறுமாதம் உரிமம் ரத்து செய்யப்படும்.

சினிமா பிரபலங்கள் மது அருந்தி வாகனம் ஓட்டி சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. முன்பு மது போதையில் வாகனம் ஓட்டிவந்தால் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு போலீஸார் அழைத்துச் சென்று பின்னர் சான்றிதழ் பெறுவார்கள்.

ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள கருவிமூலம் இரண்டு விநாடிகளில் எத்தனை சதவிகிதம் மது அருந்தியுள்ளார் என்ற தகவலுடன், பெயர் வாகன எண் உட்பட அனைத்தும் பதிவாகிவிடும் என்பதால் போலீஸார் நினைத்தாலும் சம்பந்தப்பட்டவர்களை அனுப்ப முடியாது.

இதற்கு முன் நடிகர் அருண் விஜய், நடிகர் ஜெய் ஆகியோர் மது அருந்தி விபத்து ஏற்படுத்தி போலீஸாரிடம் சிக்கிய பிரபலங்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x