Published : 06 Jul 2018 03:39 PM
Last Updated : 06 Jul 2018 03:39 PM

கருப்பு உடை அணிந்து தலைமைச் செயலக வளாகத்துக்குள் வரத் தடையா? - முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

கருப்பு உடை அணிந்து தலைமைச் செயலக வளாகத்துக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் (டைம்ஸ் ஆஃப் இந்தியா) வியாழக்கிழமை அன்று, தமிழக தலைமைச் செயலகத்திற்குள் செல்லும் வருகையாளர்கள் எவரும் கருப்புச் சட்டை, கருப்பு உடை அணிந்து வரக்கூடாது என்ற தடை உத்தரவு இருக்கிறது என்று கூறி, அங்குள்ள காவல் அதிகாரிகள், கருப்புச் சட்டை அணிந்து வருவோரைத் தடுப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது. அதுமட்டுமல்ல, பகுத்தறிவுக்கும், மனித உரிமைகளுக்கும் விரோதமான மனித உரிமைப் பறிப்பும் ஆகும்.

முதல்வருக்கும் துணை முதலமைச்சருக்கும் தெரிந்துதான் இது நடக்கிறதா? இது முதல்வர், துணை முதல்வர் போன்றவர்களுக்கு உடன்பாடானதா? அத்தகைய வாய்வழி ஆணையையோ, எழுத்துப்பூர்வ உத்தரவையோ போட்டிருக்கிறார்களா என்பது புரியவில்லை. அதற்கு ஒரு பாதுகாப்பு தேடுவதுபோல கடந்த 3 ஆண்டுகளாக இது அமலில் இருப்பதாகக் கூறி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசையும் இந்த விவகாரத்தில் இழுத்திருக்கின்றனர்.

எண்ணுவதற்கும், உண்ணுவதற்கும் உள்ள உரிமை அடிப்படை உரிமை; அதுபோல, உடை அணிவதும், எந்த நிற சட்டை போடுவது என்பதும் அவரவர் உரிமை. அதைத் தடுப்பது அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைப்படி தவறு மட்டும் அல்ல; சட்ட விரோதமும் ஆகும். இச்செயலுக்கு நாம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுபற்றி தமிழக அரசு உடனடியாக ஒரு மறுப்பு - விளக்க அறிக்கை தரவேண்டும். குறிப்பிட்ட பிரச்சினைகளின்போது முதல்வர்களே கருப்புடை அணிந்ததில்லையா?

முதல்வரும், துணை முதல்வரும், மற்ற அதிமுகவினர் தொடங்கி, அனைத்து அரசியல் கட்சியினரும் அவ்வப்போது தங்கள் கோரிக்கைகளை விளக்கும்போது கருப்புடை அணிந்துதானே வருகிறார்கள்? ஈழத் தமிழர் பிரச்சினையில், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். கருப்புச் சட்டை அணியவில்லையா? காவிரிப் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது முதல்வரிலிருந்து பலரும் கருப்புச் சட்டைப் அணிந்தார்களே? அதிமுக கொடியில் உள்ள கருப்பு - சிவப்பு - திராவிடர் இயக்கத்தின் அடையாளத்தைக் காட்டுகிறது என்பது கூடவா புரியவில்லை?

1946-ம் ஆண்டில் மதுரை கருப்புச் சட்டை மாநாட்டுப் பந்தலைக் கொளுத்திய மதுரை வைத்தியநாதய்யர் பரம்பரையா ஆட்சியில் இருக்கிறது? அமைச்சர்களிடம் பல உரிமைகளுக்காக முறையீடு செய்ய வழக்கறிஞர்கள் தலைமைச் செயலகம் செல்லும்போது கருப்புடை அணிந்துதானே வருகிறார்கள்?

அவ்வளவு ஏன்? ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி மசோதாவை தமிழக சட்டப்பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க, தலைமைச் செயலகத்திற்கு நானும், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனும் சென்றபோது, தடுக்கப்படாதபோது, இப்போது என்ன? அதுபோல, காவிரி நதிநீர்ப் பங்கீடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டியபோது, அங்கு சென்ற திராவிடர் கழகத்தினராகிய நாங்கள் வழக்கம்போல் கருப்புடைதானே அணிந்திருந்தோம். எங்களை அமைச்சர்கள் உள்பட அப்போது வரவேற்றார்கள்.

எனவே, இப்படி தேவையில்லாத குழப்பத்தை, ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாச தலைமைச் செயலக அதிகாரிகளோ, காவல்துறையினரோ மேற்கொள்ளும் இந்தச் செயலைத் தவிர்த்து உடனே தெளிவுபடுத்துதல் அவசரம் - அவசியம். வெள்ளைத் தலைமுடியை கருப்புச் சாயம் அடித்துத்தானே அமைச்சர்கள் உள்பட, அதிகாரிகள் உள்பட அங்கே செல்லுகின்றனர். எனவே, கருப்புக்கு மறுப்புச் சொல்வது நடைமுறைச் சாத்தியமா?போராட்டங்களை ஒழுங்குபடுத்துவது வேறு; அதற்கு இம்மாதிரிக் கோமாளிக் கூத்தில் ஈடுபடக்கூடாது. உடனே தமிழ்நாடு அரசு ஓர் ஆணையைப் பிறப்பித்து இதற்கு முன் உள்ளதை வாபஸ் வாங்கவேண்டும்” என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x