Published : 06 Jul 2018 12:10 PM
Last Updated : 06 Jul 2018 12:10 PM

சேலம்- சென்னை பசுமை சாலை திட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சேலம்-சென்னை எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டம் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக அமையவுள்ளது. தற்போது இத்திட்டத்திற்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிக்காக மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பி.வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் “8 வழிச்சாலை திட்டத்திற்காக சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயாமல், நில உரிமையாளரிடம் எவ்வித ஆட்சேபனைகளையோ கருத்துகளையோ பெறாமல் தமிழக அரசு, தன்னிச்சையாக நில ஆர்ஜிதம் செய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. பசுமையான சூழலை அப்புறப்படுத்தி அதில் சாலை அமைப்பதன் மூலம் வனவியல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே, சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயாமல் இப்பணிக்கு சாலை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த நில ஆர்ஜித உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என அதில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கல்யாணசுந்தரம், முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி “இந்த உத்தரவுக்கு 8 வழிச்சாலை தொடர்பாக அரசு அதிகாரி பிறப்பித்துள்ள உத்தரவு தன்னிச்சையானது. அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கும் முரணானது. எனவே அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில், “இதுதொடர்பாக ஏற்கெனவே பல வழக்குகள் முதன்மை அமர்வில் நிலுவையில் உள்ளது. ஆகவே தடை விதிக்க கூடாது. பொதுமக்களிடம் உரிய கருத்துகளை கேட்டுத்தான் நில ஆர்ஜிதம் நடந்தது” என வாதிடப்பட்டது.

இதையடுத்து, நில ஆர்ஜிதம் என்பது அரசின் முடிவுக்கு உட்பட்டது என்பதால் தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, இந்த வழக்கை இதுதொடர்பாக நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x