Published : 06 Jul 2018 11:12 AM
Last Updated : 06 Jul 2018 11:12 AM

மேகதாது திட்டம் குறித்து கர்நாடக முதல்வர் அறிவிப்பு; காவிரி மேலாண்மை ஆணையம் கண்டிக்க வேண்டும்: வாசன்

மேகதாது திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக முதல்வர் கூறியிருப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் கண்டிக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மேகதாது திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக முதல்வர் தன்னிச்சையாக, எதேச்சதிகாரத்தோடு அறிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. கர்நாடக அரசு இதுபோன்ற அறிவிப்பை இனிமேல் தன்னிச்சையாக வெளியிடாமல் உச்ச நீதிமன்றத்திற்கும், மேலாண்மை ஆணையத்துக்கும், ஒழுங்காற்றுக்குழுவிற்கும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்பதை மத்திய அரசு அழுத்ததோடு கர்நாடக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

கர்நாடக முதல்வர் சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையின் போது மேகதாது திட்டம் செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனையில் எந்த ஒரு மாநிலமும் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
 

குறிப்பாக காவிரி நதிநீர் பங்கீட்டில் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உச்ச நீதிமன்றத்தால் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் முதல் கூட்டமும், ஒழுங்காற்றுக்குழு கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கர்நாடக அரசு இந்த மாதத்திற்கு தமிழகத்துக்கு மட்டும் 31.24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதனை நிறைவேற்ற வேண்டியது கர்நாடக அரசின் கடமை.

இச்சூழலில் கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையின் போது அம்மாநில முதல்வர் எதேச்சதிகாரத்தோடு, தன்னிச்சையாக மேகதாது திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. தண்ணீர் பங்கீட்டிலும், அணைக்கட்டுவதிலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி என எந்த ஒரு மாநிலமும் தன்னிச்சையாக, எதேச்சதிகாரத்தோடு அறிவிப்பும் வெளியிட முடியாது, முயற்சிகளும் மேற்கொள்ள முடியாது.

இந்த சூழலில் மேகதாது திட்டம் குறித்து கர்நாடக முதல்வரின் அறிவிப்பை தமிழக அரசு உட்பட கேரளா மற்றும் புதுச்சேரி அரசு கூட ஏற்றுக்கொள்ளாது. கர்நாடக அரசின் இப்போக்கு காவிரி நதிநீர் பிரச்சினையில் மட்டுமல்ல அணைக்கட்டுவதிலும் சட்டத்திற்கோ, நியாயத்திற்கோ கட்டுப்பட மாட்டோம் என்ற ரீதியில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவது போல் அமைந்திருக்கிறது.

எனவே மேகதாது குறித்த கர்நாடக அரசின் இப்போதைய அறிவிப்பை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். மேலும் கர்நாடக அரசு இதுபோன்ற அறிவிப்பை இனிமேல் தன்னிச்சையாக வெளியிடாமல் உச்ச நீதிமன்றத்திற்கும், மேலாண்மை ஆணையத்துக்கும், ஒழுங்காற்றுக்குழுவிற்கும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்பதை மத்திய அரசு அழுத்ததோடு கர்நாடக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக மேகதாது திட்டம் தொடர்பாக கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை மேலாண்மை ஆணையமும் கண்டிப்பதோடு, கண்காணித்து கர்நாடக அரசின் சட்டத்திற்கு புறம்பான போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றிற்கு உட்பட்டு எடுக்கப்படும் வழிகாட்டுதலை 4 மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் உறுதியாக இருக்க வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x