Published : 06 Jul 2018 08:16 AM
Last Updated : 06 Jul 2018 08:16 AM

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு: அபராதத்துடன் தண்டனை வழங்க யாழ்ப்பாணம் அதிகாரிகள் பரிசீலனை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்களுக்கு அபராதத்துடன் சிறை தண்டனை விதிப்பது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்ட 61 நாட்கள் தடைக்காலம் முடிந்த நிலையில் ஜுன் 15 முதல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் வியாழக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என அந்நாட்டு கடற்படையினர் ஒலி பெருக்கி மூலம் முதலில் எச்சரித்தனர்.

பின்னர் தேவதாஸ், பிரான்சிஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி ரென்ஸிங், பாலு, கார்த்திக்ராஜ், சுதன், அலெக்ஸ் பாண்டியன், லெவுசன், முனீஸ்வரன், டென்போஸ், அந்தோனி இன்னாசி உட்பட 12 மீனவர்களை சிறைபிடித்தனர்.

இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறையினரின் விசாரணையில் இலங்கையில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் அட்டை போன்ற கடல் வாழ் உயிரினங்களை பிடித்தது தெரிய வந்துள்ளது.

இதனால் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் ராமேசுவரம் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

இதன்பேரில் 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை மதிப்பு ரூ.50 லட்சம் (இந்திய மதிப்பு ரூ.21 லட்சத்து 18,853 ), 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.2 கோடி (இந்திய மதிப்பு ரூ.84 லட்சத்து 75,415), 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ. 10 கோடி (இந்திய மதிப்பு ரூ.4 கோடியே 23 லட்சத்து 77,075), 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ. 15 கோடி (இந்திய மதிப்பு ரூ.6 கோடியே 633 லட்சத்து 56,561), 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு ரூ. 17.5 கோடி வரையிலும் (இந்திய மதிப்பு ரூ.7 கோடியே 41 லட்சத்து 59,882) அபராதமும், அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x