Published : 06 Jul 2018 08:11 AM
Last Updated : 06 Jul 2018 08:11 AM

தீபாவளிக்கான முன்பதிவு தொடங்கியது- தென் மாவட்ட விரைவு ரயில்களில் ஒரே நிமிடத்தில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன: நவம்பர் 3-ம் தேதி செல்ல இன்று முன்பதிவு செய்யலாம்; கடந்த ஆண்டைவிட கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க வாய்ப்பு

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான டிக்கெட்கள் விறுவிறுப்பாக விற்றதால், படுக்கை வசதி பெட்டிகளுக்கான டிக்கெட்கள் ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்தன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி வருகிறது. ரயில் டிக்கெட்டை 120 நாட்களுக்கு (4 மாதங்கள்) முன்பே முன்பதிவு செய்யும் முறையை ரயில்வே துறை கடந்த 2015 ஏப்ரல் 1-ம் தேதி அமல்படுத்தியது. தீபாவளிக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி செவ்வாயன்று வருகிறது. திங்கள் ஒருநாள் விடுப்பு எடுத்தால், வெள்ளிக்கிழமை (நவம்பர் 2) இரவு புறப்படலாம் என பலரும் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் நேற்று காலை 8 மணி முதல் முன்பதிவு செய்தனர்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், மயிலாப்பூர், தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக நேற்று அதிகாலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 முதல் 5 நிமிடத்திலேயே தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதிகை, பாண்டியன், அனந்தபுரி, மதுரை ஏசி, சம்பர்க் கிராந்தி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, முத்துநகர் விரைவு ரயில்களில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக, படுக்கை வசதி பெட்டிகளுக்கான டிக்கெட்கள், முன்பதிவு தொடங்கி ஒரு நிமிடத்திலேயே விற்றுத் தீர்ந்தன.

ஏமாற்றத்துடன் திரும்பினர்

இணையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. பல்வேறு புதிய செயலிகளும் அறிமுகம் செய்துள்ளதால், இணையதளத்தில் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை 70 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதனால், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் கூட்டத்தின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையே, தீபாவளி முன் பதிவின்போது, நேற்று வந்திருந்த கணிசமான அளவு மக்களுக்கு டிக்கெட் கிடைக்காததால், நூற்றுக்கணக்கானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நவம்பர் 2-ம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்பவர்கள் 5-ம் தேதி (நேற்று) காலை முதல் முதல் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியவுடன், அடுத்த 2 முதல் 5 நிமிடங்களில் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பொதிகை, பாண்டியன், நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட 2-ம் வகுப்பு டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன.

ஏசி பெட்டிகளில் இருந்த டிக்கெட்களும் அடுத்த 20 நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட்டன. பெரும்பாலான விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் சராசரியாக 150-ஐ எட்டி யுள்ளது.

20 மையங்களில் முன்பதிவு

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, குமரி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி செல்லும் ரயில்கள் மற்றும் சேலம், திருப்பூர் வழியாக கோவை செல்லும் ரயில்களுக்கு இந்த டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. சென்னையில் 36 மையங்களிலும், மற்ற ரயில்வே கோட்டங்களில் தலா 20 மையங்களிலும் முன்பதிவு நடைபெற்றது. மொத்தம் 20 ரயில்களுக்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இதேபோல நவம்பர் 3-ம் தேதி சனிக்கிழமைக்கான முன்பதிவு ஜூலை 6-ம் தேதி (இன்று) காலையும், நவம்பர் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கான முன்பதிவு ஜூலை 7-ம் தேதி (நாளை), நவம்பர் 5-ம் தேதி திங்கள்கிழமைக்கான முன்பதிவு ஜூலை 8-ம் தேதி நடக்கும்.

சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் சேர்ப்பது போன்றவை குறித்து அதிகாரிகள் கூட்டம் அக்டோபரில் நடக்கும். தாம்பரத்தில் 3-வது ரயில் முனையம் தொடங்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டைவிட கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வாய்ப்பு உண்டு.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x