Published : 06 Jul 2018 08:09 AM
Last Updated : 06 Jul 2018 08:09 AM

பேரவைத் துளிகள்: கனிம ஆய்வுக்கு அனுமதி இல்லை

கனிம ஆய்வுக்கு அனுமதி இல்லை

பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு பேசும்போது, ‘‘காங்கேயம் அருகே உள்ள பல கிராமங்களில் இரும்புத்தாது உள்ளிட்ட கனிம வளங்கள் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதியில் கனிம வளங்களை எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது’’ என்றார். அதற்கு பதிலளித்த கனிமவளத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘கனிம வளம் குறித்து ஆய்வு நடத்த தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காங்கேயம் பகுதியில் மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் அவர்கள் ஆய்வு நடத்தியதால் அந்த ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது. மக்களை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது’’ என்றார்.

செலவுத் தொகையை தாருங்கள்

பொதுத் துறை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கே.என்.நேரு, ‘‘சட்டப்பேரவை உறுப்பினர்களை பொறுத்தவரை, ஊருக்கு சென்றால் தொகுதி மக்களை, கட்சிக்காரர்களை சந்திப்பதுடன் கிரிக்கெட், சடுகுடு உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கும் தலைமையேற்க வேண்டியுள்ளது. இதுதவிர திருமணம், கோயில் விழாக்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. எனவே, ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் சம்பளம் வேண்டாம். செலவுகளை எழுதித் தருகிறோம். அதை அரசில் இருந்து கொடுத்தால் போதும். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களின் சிரமங்கள் தெரியாது. டிஜிபியாக இருந்த ஒருவர் தற்போது உறுப்பினராக உள்ளார். அவரிடம் கேட்டால் தெரியும். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கள் மீதும், நாங்கள் வந்தால் உங்கள் மீதும் வழக்கு போடுகிறோம். சிறைக்கும் செல்ல வேண்டியுள்ளது. எனவே, அமைச்சர் சிறையையும் கவனிக்க வேண்டும்’’ என்றார். இதைக்கேட்டு முதல்வர், துணை முதல்வர், எதிரக்கட்சித் தலைவர் உள்ளிட்ட அவையில் இருந்த எல்லோரும் சிரித்தனர்.

பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்

மதுரை மத்திய தொகுதி திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜனின் கேள்விக்கு பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘மதுரை மத்திய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் காலியாக உள்ள இடத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்படும். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.24 கோடியே 81 லட்சத்தில் இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 6,394, இரண்டாவது தளத்தில் 6,394 என மொத்தம் 12,788 சதுர மீட்டர் பரப்பில் இந்த வாகன நிறுத்துமிடம் அமைய உள்ளது. இங்கு 118 நான்கு சக்கர வாகனங்களும், 1,601 இரு சக்கர வாகனங்களும் நிறுத்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்’’ என்றார்.

3 நகராட்சிகளில் குடிநீர் திட்டங்கள்

பல்லாவரம் தொகுதி உறுப்பினர் இ.கருணாநிதியின் கேள்விக்கு பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘பல்லாவரம் நகராட்சியில் 86 லட்சம் லிட்டர் குடிநீர் 4 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. பல்லாவரம் நகராட்சியில் ரூ.99 கோடியே 95 லட்சத்திலும், அனகாபுத்தூர் நகராட்சியில் ரூ.14 கோடியே 87 லட்சத்திலும், பம்மல் நகராட்சியில் ரூ.43 கோடியே 10 லட்சத்திலும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x