Published : 06 Jul 2018 07:49 AM
Last Updated : 06 Jul 2018 07:49 AM

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை தொடர்ந்து டொரன்டோ, ஆக்ஸ்ஃபோர்டிலும் தமிழ் இருக்கைக்கு முயற்சி: தமிழ் இருக்கை குழுமம் தகவல்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி ஆய்வு இருக்கை அமைவதை ஹார்வர்டு தமிழ் இருக்கை குழுமம் அதிகாரபூர்வ மாக அறிவித்தது. டொரன்டோ, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் ‘ஃபெட்னா -2018’ தமிழ் விழா அமெரிக்காவின் டல்லாஸ் மாநகரத்தில் 4 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா வில் ஹார்வர்டு தமிழ் இருக் கைக் குழும அறக்கட்டளை உறுப்பினர்களான மருத்துவர்கள் விஜய் ஜானகிராமன், திருஞானசம்பந்தம், பால் பாண்டியன், முனைவர்கள் பாலாசுவாமிநாதன், சொர்ணம் சங்கர், குமார் குமரப்பன் ஆகியோரு டன் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதி காரி ஜி.பாலசந்திரன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான உலகத் தமிழர்கள் கலந்துகொண்டனர்.

விழாவுக்கு தலைமை வகித்த மருத்துவர் ஜானகிராமன் தனது நிறைவுரையில் பேசியதாவது:

ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குத் தேவையான 6 மில்லியன் டாலர்களை, இலக்காக நிர்ணயித்த தேதிக்கு முன்பாகவே திரட்டி பல்கலைக்கழகத்திடம் வழங்கி, தமிழுக்கான இருக்கையை உறுதி செய்ய முடிந்தது. உலகம் முழுவதும் இருந்து 7,588 நன்கொடையாளர்கள் தாராளமாக அள்ளி வழங்கியதே இதற்குக் காரணம்.

இதைத் தொடர்ந்து, கனடா நாட்டின் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் 25-ம் தேதி தமிழ் இருக்கைக்கான பணி தொடங்கப்பட்டுவிட்டது. இதற்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர் தேவை. தொடக்க விழாவிலேயே 6 லட்சம் டாலரை கனடா வாழ் தமிழர்கள் அளித்தனர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் இருக்கை அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஜெர்மனியின் கோலன் நகர் பல்கலைக்கழகத்தில் 40,000 அரிய தமிழ் நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. புதிதாக தமிழ் இருக்கைகள் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவதோடு, ஏற்கெனவே இருக்கும் தமிழ் பொக்கிஷங்களையும் நாம் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x