Published : 06 Jul 2018 07:45 AM
Last Updated : 06 Jul 2018 07:45 AM

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்றபோது நேபாளத்தில் சிக்கிய 16 பேர் சென்னை திரும்பினர்: முதல்வர் பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்றபோது மழை, வெள்ளம் காரணமாக நேபாளத்தில் சிக்கிய 16 பேர் சென்னை வந்து சேர்ந்தனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் தலைமையில் 23 பேர் கடந்த ஜூன் 20-ம் தேதி கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காக நேபாளம் சென்றனர். இதேபோன்று இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மழை, வெள்ளத்தினால் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். விமானப் போக்குவரத்து முடங்கியதால் அனைவரும் சொந்தஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

தமிழகத்தை சேர்ந்த பக்தர்களை மீட்க வெளியுறவுத்துறை மூலமாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதில், 4 பேர் முதலில் சென்னை திரும்பினர். மீதமிருந்த 19 பேரும் சிறிய ரக விமானம் மூலம் 2-ம் தேதி மீட்கப்பட்டு லக்னோ விமான நிலையம் வந்தடைந்தனர். இவர்களில் 3 பேர் டெல்லியில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். 16 பேர் லக்னோவில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர்.

விமான நிலையத்தில் அவர்களின் உறவினர்கள் கட்டித் தழுவி வரவேற்றனர். நேபாளத்தில் 5 நாட்கள் கடுமையான குளிரில் தவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மதுராந்தகம் குழு

மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ காயத்ரிதேவி உட்பட 21 பேர்களுடன் மற்றொரு குழு கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்றிருந்தது. இவர்கள் மானசரோவருக்கு கீழே உள்ள ஹில்சா பகுதியில் சிக்கிக் கொண்டனர். இவர்களுடன் சேர்த்து சுமார் 500 பேர் அங்கு இருந்தனர். பின்னர் ராணுவ உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு சிமிகோட் பகுதிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

இந்நிலையில் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு தொலைபேசி மூலம் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் காயத்திரிதேவி கூறியதாவது:

‘‘ஹில்சா பகுதியில் 100 பேர் தங்க வேண்டிய இடத்தில் 500 பேர் தங்கியுள்ளனர். ஆனால் அதிக குளிர் காரணமாக முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். எனது அம்மாவுக்கும் உடல்நலம் பாதிக்கப்படுவது போல் இருந்ததால் கடும் முயற்சிக்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் எங்கள் குழுவினர் சிலருடன் சிமிகோட் பகுதிக்கு வந்துவிட்டோம். அதிக குளிர்தான் பெரிய பிரச்சினையாக உள்ளது’’ என்றார்.

முதல்வருடன் சந்திப்பு

மோசமான பருவநிலையால் நேபாளத்தில் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்தவுடன் அவர்களை பாதுகாப்புடன் மீட்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, அரசு அதிகாரிகள் இந்திய தூதரகம் மற்றும் நேபாள அரசின் ஒத்துழைப்புடன், பாதுகாப்பாக யாத்ரீகர்களை தமிழகம் அழைத்து வந்தனர். தமிழக அரசின் உதவியால் மீட்கப்பட்ட யாத்ரீகர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வரை நேற்று சந்தித்து, நன்றி தெரிவித்தனர். அப்போது வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ, ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x