Published : 06 Jul 2018 07:39 AM
Last Updated : 06 Jul 2018 07:39 AM

பள்ளிகளுக்கு சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு விநியோகிக்கும் தனியார் நிறுவனத்தில் வருமானவரி சோதனை: தமிழகம் முழுவதும் 76 இடங்களில் 500 அதிகாரிகள் ஆய்வு

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு போன்ற பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனத்தின் அலுவலகங்கள், குடோன், உரிமையாளர் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 76 இடங்களில் 500-க்கும் அதிகமான வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு போன்ற பொருட்களை ‘கிறிஸ்டி ஃபிரைடுகிராம் இண்டஸ்ட்ரி’ என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆண்டிபாளையத்தில் இதன் அலுவலகம் உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள இந்த நிறுவனம், அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விநியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில், கிறிஸ்டி நிறுவனம் போலியான பெயர்களில் பல நிறுவனங்களை உருவாக்கி, அங்கிருந்து பொருட்களை வாங்கியதாக போலியாக கணக்கு தாக்கல் செய்து, வரி ஏய்ப்பிலும், கறுப்பு பண பதுக்கலிலும் ஈடுபட்டிருப்பதாக வருமானவரித் துறைக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கிறிஸ்டி நிறுவனத்திலும், அதனுடன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமானவரித் துறையினர் நேற்று ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

கோவை, சேலம், பெங்களூருவில் உள்ள கிறிஸ்டி நிறுவன அலுவலகங்கள், சென்னை திருவான்மியூரில் உள்ள அதன் உரிமையாளர் பி.எஸ்.குமாரசாமியின் வீடு மற்றும் அலுவலகம், கோயம்புத்தூரில் உள்ள நேச்சுரல் ஃபுட் புராடக்ட்ஸ், சுவர்ணபூமி நிறுவனங்கள், ராசிபுரத்தில் உள்ள ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனம், நாமக்கல் மாவட்டத்தில் காதப்பள்ளி, வேப்பநத்தம், கருப்பட்டிபாளையம் ஆகிய இடங்களில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தின் முட்டை குடோன்கள் உட்பட பல இடங்களில் சோதனை நடத்தப் பட்டது.

கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியின் நண்பர் ஜெயப்பிரகாஷ், சென்னை மயிலாப்பூரில் அக்னி எஸ்டேட்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவரது வீடு, அலுவலகம் மற்றும் திருச்செங்கோடு மோர்பாளையத்தில் உள்ள குமாரசாமியின் மற்றொரு வீடு, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் வட்டூரில் உள்ள உரிமையாளர் குமாரசாமி வீடு, கூட்டபள்ளியில் உள்ள நிறுவனத்தின் ஆடிட்டர்கள் ராமகிருஷ்ணன், சங்கர் ஆகியோரது வீடு, தொண்டிக்கரடு, விட்டம்பாளையம் பகுதிகளில் உள்ள குமாரசாமியின் உறவினர்கள் வீடுகள், நாமக்கல், ராசிபுரம் சுற்றுவட்டாரங்களில் உள்ள நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் என மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சென்னையில் 37 இடங்களில் சோதனை நடந்தது. தமிழகம் முழுவதும் மொத்தம் 76 இடங்களில் சுமார் 500 வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை முடிவில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. வங்கிக் கணக்கு விவரங்கள், போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ம.பி.யில் விசாரணை

இதற்கிடையில், தொழில் விஷயமாக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூருக்கு சென்றுள்ள குமாரசாமியிடம் அங்குள்ள வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஏஎஸ் வீட்டில் சோதனை

கிறிஸ்டி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுதாதேவியின் வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை நெற்குன்றத்தில் உள்ள அவரது வீட்டில் 2 அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கும் கிறிஸ்டி நிறுவனம் சத்துமாவு பாக்கெட்களை விநியோகம் செய்து வந்துள்ளது. அது தரமற்று இருப்பதாகவும், மாவு கெட்டுப்போகாமல் இருக்க, துத்தநாகம் அதிக அளவில் கலக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, கிறிஸ்டி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கர்நாடக அரசு ரத்து செய்தது குறிப்பிடத் தக்கது.

தொடர் கண்காணிப்பு

கிறிஸ்டி நிறுவனம் கடந்த 1982-ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல புகார்கள் எழுந்ததால், கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றியதாக செய்திகள் வெளியானது. இதற்கிடையில், கடந்த 2016 நவம்பரில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது கிறிஸ்டி நிறுவனம் பல போலி நிறுவனங்களை உருவாக்கி பணத்தை மாற்றியதாக கூறப்படுகிறது. அப்போதிருந்தே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை வருமானவரித் துறை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்து, நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x