Published : 04 Jul 2018 08:13 AM
Last Updated : 04 Jul 2018 08:13 AM

பசுமை சாலைக்கு தொடரும் எதிர்ப்பு: தி.மலை மாவட்டத்தில் தற்கொலை முயற்சி; சேலம் அருகே 16 பேர் கைது

பசுமை வழிச்சாலைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு தொடர்கிறது. அதிகாரிகள் நிலத்தில் குறியீடு கற்கள் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதேபோன்று, சேலம் அருகே நிலம் அளவீடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த 8 பெண்கள் உள்ளிட்ட 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை - சேலம் இடையே 277 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே ஆத்துரை கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் அளவீடு செய்து குறியீடு கற்களை பதிக்கும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது, ஆத்துரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ராதா, சுந்தர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பையும் மீறி அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இதனால், வேதனை அடைந்த விவசாயிகள் இருவரும், தங்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வட்டாட்சியர்கள் அரிதாஸ், தமிழ்மணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில், போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர், தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகளை கைது செய்தனர்.

இதேபோல், செய்யாறு அடுத்த தென்மாவந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்(72). இவரது விவசாய நிலத்திலும் அளவீடு செய்து குறியீடு கற்களை வருவாய்த் துறையினர் பதித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணன், திடீரென கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை, போலீஸார் உயிருடன் மீட்டனர்.

சேலத்திலும் எதிர்ப்பு

பசுமை வழிச்சாலை திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 36 கிமீ சாலை அமைக்க 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம் அளவீடு செய்யப்பட்டு குறியீடு கற்கள் நடப்பட்டன. இதில், பட்டா இடங்களில் உள்ள நிலத்தின் உரிமையாளர்களை கண்டறிய வருவாய்த்துறை நில அளவையாளர்கள் தற்போது, நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் அடுத்த வீரபாண்டி பாரப்பட்டி கிராமத்தில் நேற்று நிலம் எடுப்பு சிறப்பு வட்டாட்சியர் பத்மபிரியா தலைமையில் வருவாய்த் துறையினர் நில அளவிடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த டிஎஸ்பி சங்கர நாராயணன் தலைமையிலான போலீஸார் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை வேனில் ஏற்றினர். இதைக் கண்டித்து போலீஸாருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வேனில் ஏற்றிய விவசாயிகளை போலீஸார் விடுவித்தனர். இதனால், அந்த பகுதியில் பணியை நிறுத்திய வருவாய்த் துறையினர் அருகில் உள்ள நிலத்துக்கு சென்றனர். அங்கும் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 8 பெண்கள் உள்ளிட்ட 16 பேரை கைது செய்த போலீஸார் அவர்களை மல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வீடுகளில் கருப்புக் கொடி

இதனிடையே, அயோத்தியாபட்டணத்தை அடுத்த ராமலிங்கபுரத்தில் 8 வழிச் சாலைக்கு கையகப்படுத்தப்பட உள்ள கோயிலில், திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம்-அரூர் சாலை பருத்திக்காடு சீரிக்காடு பகுதியில் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x