Published : 30 Jun 2018 09:44 PM
Last Updated : 30 Jun 2018 09:44 PM

3 மனைவிகள், விளைநிலங்கள், லாரி: கொள்ளையடித்து ராஜ வாழ்க்கை வாழ்ந்த நபர் கைது

3 மனைவிகள் விளை நிலங்கள், லாரிகள் என கொள்ளையடித்து தமிழ்நாடு முழுவதும் கைவரிசையை காண்பித்து வந்த கொள்ளையனை கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோட்டூர்புரம் கோட்டூர் தோட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 16-ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து லாக்கரோடு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பெயரில் கோட்டூர்புரம் போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(40) என்பவர் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் தான் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் வெங்கடேசன் மீது கோட்டூர்புரம், அபிராமபுரம் காவல்நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. வெங்கடேசன் கொள்ளையடித்த பணத்தில் வெளியூர்களில் நிலங்களை வாங்கியுள்ளதும், கார், லாரி போன்ற வாகனங்களை வாங்கி வாடகை விட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் வெங்கடேசனுக்கு சென்னையில் 2 மனைவிகளும் வெளியூர்களில் ஒரு மனைவி என மொத்தம் 3 மனைவிகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. 1999 ஆம் ஆண்டிலிருந்து திருட்டு தொழிலில் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

கோவை, மதுரை, ஈரோடு போன்ற சிறைகளில் அடைக்கப்பட்டதும் தெரியவந்த்து. கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடமிருந்து 8 சவரன் நகை, ஒரு லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலீஸார் விசாரணையில் வெங்கடேசன் தனக்கும் தனது மனைவிகளுக்கும் எய்ட்ஸ் உள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். விசாரணையில் தப்பிக்க இவ்வாறு கூறுகிறாரா? என போலீஸார் வெங்கடேசனை மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x