Published : 30 Jun 2018 04:48 PM
Last Updated : 30 Jun 2018 04:48 PM

கமல் வீட்டில் அத்துமீறி நுழைந்த ரசிகர்: புகாரின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் சுவரேறி குதித்து கமலை பார்க்கச்சென்ற ரசிகர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டா அவர் மீண்டும் கமல் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் பிடித்துச் சென்றனர்.

தஞ்சை மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர் சபரிநாதன். திருவல்லிக்கேணியில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். தீவிர கமல் ரசிகரான இவர் கமல்ஹாசனை பார்க்கவேண்டும் என்ற ஆசையால் நேற்று கமலின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்றார். தற்போது அது அலுவலகமாக செயற்படுகிறது. கமலை பார்க்கவேண்டும் என வாட்ச்மேனிடம் அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால் வாட்ச்மேன் அனுமதி அளிக்கவில்லை. நான் கமலின் தீவிர ரசிகன், அவர் பேச்சால் ஈர்க்கப்பட்டவன் அவரை ஒரே ஒரு முறை தூரத்தில் நின்றாவது பார்த்துவிட்டு சென்று விடுகிறேன் என வாட்ச்மேனிடம் சபரிநாதன் கெஞ்சியுள்ளார். ஆனால் உன்னை உள்ளே அனுப்பும் அதிகாரம் எனக்கு கிடையாது என வாட்ச்மேன் மறுத்துள்ளார்.

சிறிது நேரம் அங்கேயே நின்றபடி சபரிநாதன் கெஞ்சியுள்ளார். பின்னர் அவரை காணவில்லை. இந்நிலையில் வாட்ச்மேன் பக்கத்தில் சென்றுவிட்டு வந்தபோது சபரிநாதன் கமல் வீட்டின் உள்ளே நின்றுக்கொண்டிருப்பதை பார்த்து எப்படி உள்ளே சென்றாய் என்று கேட்டுள்ளார்.

நீங்கள் உள்ளே அனுமதிக்காததால் நான் சுவரேறி குதித்து உள்ளே சென்றேன், அதற்கு மேல் எங்கு போவது என்று தெரியாததால் திரும்பிவிட்டேன் என்று கூறியுள்ளார். அவர் மேல் சந்தேகம் அடைந்த கமல் வீட்டு பாதுகாவலர்கள் அவரை பிடித்து வைத்து தேனாம்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் பேரில் கமலின் இல்லத்துக்கு வந்த போலீஸார் அந்த ரசிகரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அவர் கூறிய தகவல் உண்மை என்பதும் அவர் கமலின் தீவிர ரசிகர் எனபதும் தெரிய வந்ததன் பேரில் இனி இப்படி செய்யக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு வழக்கு எதுவும் பதியாமல் அனுப்பி விட்டனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் அலுவலகத்திலிருந்து மீண்டும் பென் ட்ரைவ் காணவில்லை என புகார் அளித்ததன் பேரில் சபரிநாதனை மீண்டும் பிடித்துவந்த போலீஸார் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x