Published : 30 Jun 2018 04:18 PM
Last Updated : 30 Jun 2018 04:18 PM

பசுமைவழிச்சாலை திட்டம்; தாதுப் பொருட்கள் எடுக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளதா? - முதல்வர் பழனிசாமி பதில்

கவுந்தி மலை, கஞ்சமலைகளிலிருந்து தாதுப் பொருட்கள் எடுக்கக்கூடிய நிறுவனங்களுக்கு ஆதரவாக சேலம்-சென்னை பசுமைவழிச்சாலை திட்டம் உள்ளதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சேலத்தில் இன்று (சனிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்:

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் கமிஷனுக்காக போடப்பட்டத் திட்டம் என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்களே?

இந்த சாலைக்கான நிலம் எடுத்து, நில உரிமையாளர்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருவதுதான் மாநில அரசினுடைய நிலை. இது மத்திய அரசின் திட்டம். மிகப் பெரிய திட்டம் தமிழகத்திற்கு வருகிறது. அதற்கு நாம் உறுதுணையாக இருக்கின்றோம். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கொண்டு வரப்படுகின்ற திட்டம். இது முழுக்க, முழுக்க மத்திய அரசினுடைய திட்டம். மாநில அரசுதான் செய்யப்போகிறது. தமிழகத்தில் சாலை அமைகின்ற காரணத்தினால், அந்த சாலைக்குத் தேவையான நிலத்தை அவர்களுக்கு வழங்குவதற்கு தமிழக அரசு உதவி செய்கிறது.

விவசாய நிலங்கள் வழியாக சாலை திட்டம் உள்ளதே...

தற்போதைய நிலைமையின்படி வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சம். இந்தத் திட்டம் முழுதாக நிறைவேறுவதற்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 ஆண்டு காலம் ஆகும். 5 ஆண்டு காலம் வருகின்றபொழுது, கிட்டத்தட்ட 70 லட்சம் வாகனங்கள் மேலும் அதிகரிக்கும். அப்பொழுது 3 கோடியே 27 லட்சம் வந்துவிடும். விபத்துக்களை குறைப்பது மட்டுமல்ல, விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றுவது அரசினுடைய கடமை.

அதற்கு ஏற்றவாறு சாலைகளை அமைப்பது, அரசினுடைய நிலைப்பாடு. இப்பொழுது அமைக்கப்படும் சாலை நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாலை. படிப்படியாக வளர்ச்சிக்குத் தக்கவாறு சாலைகளை மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த அடிப்படையில்தான், மிகப்பெரிய சாலையை உருவாக்கித் தரவிருக்கிறார்கள். இதன் மூலம் விபத்து குறைக்கப்படுகிறது.

தூரம் குறைவது மட்டுமல்லாமல், எரிபொருள் சிக்கனம் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, குறைந்தபட்சம் 1 லிட்டருக்கு 4 கிலோ மீட்டர் செல்கிற ஒரு லாரிக்கு 60 கிலோமீட்டர் குறைந்தால் 15 லிட்டர் டீசல் மிச்சமாகிறது. 15 லிட்டருக்கு ரூபாய் 1050. அதுமட்டுமல்லாமல் 60 கிலோமீட்டர் குறைவதனால் தேய்மானம் குறையும், காலநேரம் குறைகிறது. இந்தப் பகுதியின் வழியாக கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லமுடியும். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களிடமிருந்து நிலம் எடுக்கப்பட்டால், அவர்களுக்கு அரசாங்கம் இடம் கொடுத்து, அங்கே பசுமை வீடும் கட்டித்தரும்.

இழப்பீடு வழங்கும்பொழுது, கைட்லைன் மதிப்புக்கு 4 மடங்கு அதிகம் கொடுத்தாலும் அதை வைத்து அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது, அதை தெளிவுபடுத்த முடியுமா?

சில இடங்களில் ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 3 கோடி, ரூபாய் 4 கோடி கிடைக்கும். ஒரு சில இடங்களில் ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 30 லட்சம் வரை கிடைக்கும். ஒரு தென்னை மரத்திற்கு சராசரியாக 17 வயது ஆன மரம், அதாவது, வயதை வைத்துத்தான் நிர்ணயம் செய்கிறார்கள். அப்படி நிர்ணயம் செய்கின்றபொழுது, கிட்டத்தட்ட 17, 18 வயது மரத்திற்கு ரூபாய் 40 ஆயிரம் கிடைக்கிறது. ஒரு தோட்டத்திற்கு 30 மரம் போனாலும்கூட ரூபாய் 12 லட்சம் கிடைக்கும். நிலத்திற்கும் கிடைக்கிறது, மரத்திற்கும் கிடைக்கிறது. நானும் விவசாயம் செய்கிறேன், ஒரு தென்னை மரத்திற்கு வருடத்திற்கு ரூபாய் 900 தான் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இருக்கக்கூடிய பயிர்களுக்குத் தகுந்தவாறு தற்கால நிலையில் மாற்று மதிப்பீடு தருகிறார்கள்.

கவுந்தி மலை, கஞ்சமலைகளிலிருந்து தாதுப் பொருட்கள் எடுக்கக்கூடிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தத் திட்டம் இருப்பதாக சொல்கிறார்களே?

கற்பனையான கேள்வி, யாரும் பதில் சொல்லமுடியாது. சாலையை போடுவதற்குள் பலரின் விமர்சனம் கொஞ்சநஞ்சம் கிடையாது. இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், தமிழ்நாட்டில் எவ்வளவு வளர்ச்சிப் பணிகள் வந்திருக்கிறது. அதை யாராவது ஒரு சமூக ஆர்வலர் பேசகிறாரா? எவ்வளவோ திட்டங்களை நம்முடைய அதிகாரிகள் செய்கிறார்கள்.

அதையெல்லாம் யாரும் ஊக்குவிப்பது கிடையாது. இதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, இந்த அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்கிற நிலை இருக்கின்ற காரணத்தினால், இதை எப்படியாவது பழி சுமத்தி, மக்களிடத்தில் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி, இதை பெரிய பூதாகரமாக்கி, இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும். இதுதான் அவர்களுடைய குறிக்கோள், மற்ற எந்த நிலையும் கிடையாது.

விவசாயிகளிடம் நிலம் எடுக்கச் செல்லும்போது, 100, 150 போலீஸாருடன் சென்று அடக்குமுறையை கையாள்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

அதிகாரிகள் பணி செய்யும்பொழுது அவர்களுடைய பாதுகாப்புக்காக வைத்திருக்கிறார்கள். யாரையும் கஷ்டப்படுத்தவும் கிடையாது, இதுவரை, எந்த ஒரு விவசாயியும் வழக்குப் போட்டதும் கிடையாது. இந்தியாவிலேயே இரண்டாவது இந்த பசுமை வழிச்சாலையை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ரூபாய் 25 ஆயிரம் கோடிக்கு மேல் சாலை விரிவாக்கப் பணிக்காக மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.

19 சாலைகளை, மாவட்டச் சாலை, மாநில நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தி, அகலப்படுத்துவதற்கு அவர்கள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மேலும், 21 சாலைகளை விரிவுபடுத்தி, அகலப்படுத்தி, தரம் உயர்த்த வேண்டுமென்பதற்கு கருத்துரு அனுப்பியிருக்கிறோம். அதையும் செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 40 சாலைகள் வரவிருக்கிறது. நம்முடைய மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திலிருக்கின்ற அனைத்து சாலைகளையும் விரிவிபடுத்தி, உட்கட்டமைப்பு வசதியைப் பெருக்கினால்தான் புதிய, புதிய தொழிற்சாலைகளை அமைக்கமுடியும். படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற காரணத்தினால், வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டுமென்றால் உட்கட்டமைப்பு மிக முக்கியம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x