Published : 30 Jun 2018 02:52 PM
Last Updated : 30 Jun 2018 02:52 PM

காஞ்சிபுரம் காவலர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 2 ஆட்டோ டிரைவர்கள் கைது

சுங்குவார்சத்திரத்தில் காவலர் மோகன்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மோகன்ராஜ் (43). இவர் கடந்த 24-ம் தேதி இரவு வேலைக்குச் சென்றுள்ளார். போகும் வழியில் அரசுப்பள்ளி ஒன்றில் அமர்ந்து சில நபர்கள் மது அருந்தியுள்ளனர்.

இதைப்பார்த்த மோகன்ராஜ் அவர்களிடம் சென்று, 'பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இது போன்று நடக்கலாமா?' என்று கேட்டு கண்டித்து அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அங்கு மது அருந்திக்கொண்டிருந்தவர்கள், 'நீ யாரு எங்களைக் கேட்க? போலீஸாக இருந்தால் பயந்துவிடுவோமா?' என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் திடீரென தங்கள் கையிலிருந்த மது பாட்டிலால் மோகன்ராஜ் தலையில் அடித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் மோகன்ராஜ் நிலைகுலைந்து போக கல்லால் தலையில் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து அவர் தப்பிக்க முயல போதை வெறியில் இருந்த அந்த கும்பல் பாட்டிலை உடைத்து மோகன்ராஜ் வயிற்றில் குத்திவிட்டு ஓடியது.

இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மோகன்ராஜ் உயிரிழந்தார். போலீஸ் ஒருவர் கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்து பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு டிஐஜி தேன்மொழி, எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

காவலர் மோகன்ராஜை கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் முடுக்கிவிடப்பட்டனர். இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கொலைக்கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் காவலர் மோகன்ராஜை கொலை செய்ததாக திருமங்கலத்தை சேர்ந்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை தனிப்படை போலீஸார் பிடித்துள்ளனர்.

திருமங்கலம் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(28), எல்லப்பன்(26) என்ற இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் சம்பவத்தன்று மது அருந்தும்போது காவலர் மோகன்ராஜ் விசாரணை நடத்தி எழுந்து போகச் சொல்லியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர் மோகன்ராஜை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருவரையும் கொலைக்குற்றத்தின்கீழ் கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x