Published : 30 Jun 2018 02:39 PM
Last Updated : 30 Jun 2018 02:39 PM

கருப்புப் பணம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு; பிரதமர் மோடியின் சாதனைகளா? - கி.வீரமணி கேள்வி

வங்கிகளின் வாராக் கடன், கருப்புப் பணம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பின் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம்தான் பிரதமர் மோடி அரசின் சாதனைகளா என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிட வேண்டுமானால், அந்நாட்டின் வங்கிகளில் பணப் பரிவர்த்தனை, ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி ஈட்டல், ரூபாயின் மதிப்பு, வெளிநாட்டுக்கடன் இவைகளையெல்லாம் வைத்து மொத்த உற்பத்தி வருவாய் எப்படி உள்ளது என்பதையும் கணக்கிட்டு, வளர்ச்சி விகிதத்தையும் கணக்கிடுவார்கள்.

 

2014 இல் பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் அநேகம்:

1. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்து, 2 கோடி பேருக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடுவோம்.

2. கருப்புப் பணம் - உள்நாட்டில் நடமாடும், வெளிநாட்டில் வங்கிகளிலும் பதுங்கியிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குள் வரவழைப்போம் - அந்தத் தொகையிலிருந்து ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவாம்.

3. வலுவான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கிடுவோம். இன்னும் பல....

நான்கு ஆண்டுகள் முடிந்து பொதுத் தேர்தலைச் சந்திக்க இன்னும் ஒரே ஒரு ஆண்டு தான் எஞ்சியுள்ளது. இந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் வங்கிகளின் நிலை என்ன? ஷெட்யூல் வங்கிகள் முதல் பிற வங்கிகள்வரை, வாராக் கடன்கள் வர்த்தக வங்கிகளில் உள்ள மொத்தக் கடன்கள் விகிதம் மார்ச் 2018 இல் 11.6 சதவிகிதத்திலிருந்து மார்ச் 2019 இல் 12.2 ஆக உயர்ந்து வங்கிகளின் செயல்பாட்டை வெகுவாகப் பாதிக்கும் அபாய நிலை உருவாக உள்ளது என்று அண்மையில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை கூறுகிறது. கடந்த 20 ஆண்டு காலத்தில் வர்த்தக வங்கிகளில் இந்த அளவுக்கு பாதிப்புக் கடன் அளவு நிலவியதே இல்லை.

2. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் - குறிப்பாக உடனடி சரி செய்திடும் திட்டத்தின் கீழ் உள்ள வங்கிகளில் உள்ள வாராக் கடன் விகித அளவு 21 சதவிகிதத்திலிருந்து 22.3 சதவிகிதமாக உயர்ந்திடும் அபாயம் உள்ளது.

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது - அது என்ன?

வெளிச் சூழலில் உள்ள நிலவரங்களால் நாட்டுப் பொருளாதாரத்திற்கும், வங்கிகளின் செயல்பாட்டாலும் ஏற்படும் விளைவுகள் இவை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.7 விழுக்காடு அளவிலேயே நிற்குமா? அல்லது மேலும் கீழிறக்கத்திற்குச் செல்லுமா என்று கவலையுடன் சிந்திக்க வேண்டியுள்ளது.

3. வெளிநாட்டு வங்கிகளிலேயே அதிகமாக பணம் போடப்படும் வங்கி சுவிஸ் வங்கிகள்தான் என்பது உலகறிந்த செய்தி. அதிலிருந்து கருப்புப் பணத்தை மீட்டெடுப்போம் என்று மத்திய அரசு கூறிய நிலையில், அதிர்ச்சி அடையத் தக்க வகையில் செய்திகள் சுவிட்சர்லாந்திலிருந்து வருகின்றன.

பாஜக ஆட்சியில் கடந்த ஆண்டில் இந்தியர்களின் கருப்புப் பணம் பதுக்கல் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கருப்புப் பண வேட்டையின் துரித கதி, அதிதீவிர நடவடிக்கை என்றெல்லாம் பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் உரத்த குரலில் கூறியது என்னவாயிற்று?

இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு:

முன்பு 60 விழுக்காடு பெண்கள் வங்கிக் கணக்கு வைத்திருந்தனர்; இப்போது 80 விழுக்காடாக கணக்கு வைத்திருப்பது உயர்ந்துள்ளது என்று வானொலி, ஊடகங்களில் இடைவிடாத விளம்பரம் செய்வதற்கும், மேற்காட்டிய தகவலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

இந்திய ரூபாயின் மதிப்பு 1.1.2018 இல் ஒரு டாலருக்கு ஈடாக 63.68 ரூபாய்; இது இப்போது மேலும் ஆறு மாத காலத்தில் சரிந்து 68.79 ரூபாயாக ஆகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அதற்கு மேலும் சரிந்து நேற்று 69.10 ரூபாயாக ஆகியுள்ளது.

உலகச் சந்தையில் பெட்ரோலியப் பொருள் விலை ஏறும் நிலையில், அமெரிக்க கெடுபிடியில் - நாம் இறக்குமதி செய்யும் அளவுக்கு முன்பைவிட பல மடங்கு கூடுதல் பணம் தரவேண்டியிருக்குமே!

இந்தியாவிற்கு வந்து முதலீடு செய்தவர்கள் மிகக் குறைந்த லாபம் அல்லது வட்டிக் கணக்கு வரவு குறையும் நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பதிலாக, அவை வேறு நாடுகளுக்குப் பறந்துவிடும் அபாயமும்உள்ளதே!

விலைவாசி ஏறவும், பண வீக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தானடித்த மூப்பாக - பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு கொள்கையால் - எந்த அளவுக்குக் கருப்புப் பணம் வெளியே வந்து, பொருளாதாரத்திற்கு ஏற்றத்தை அளித்தது என்ற கேள்விக்குத் திருப்தியான பதிலைத் தர முடியவில்லையே!

அமித்ஷா இயக்குநராக உள்ள வங்கியில் நடந்ததென்ன?

அண்மையில் ஒரு செய்தி! பாஜக தலைவர் அமித்ஷா இயக்குநராக இருந்த அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் பண மதிப்பிழப்பு அறிவித்தவுடன் 755 கோடி ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன என எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு எந்தப் பதிலும் பாஜக தரப்பில் தரப்படாதது ஏன்?

இப்படி பலவும் நாட்டின் பொருளாதார சீர்குலைவை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதாகவே உள்ளன. பாஜக - ஆர்எஸ்எஸ் பிரதமர் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை - செயல்பாடு - படுதோல்வி அடைந்துள்ளது என்பதைத்தானே காட்டுகிறது. வரும் பொதுத் தேர்தலில் நிச்சயம் இதன் பிரதிபலிப்புப் புரியும்” என கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x