Published : 30 Jun 2018 01:19 PM
Last Updated : 30 Jun 2018 01:19 PM

மணமகன் வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: மணப்பெண்ணின் அக்கா கணவரை பிடித்து போலீஸ் விசாரணை

திருவல்லிக்கேணியில் நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகனின் வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக மணப்பெண்ணின் அக்கா கணவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலை லத்துரம் தெருவில் வசிப்பவர் அப்துல் காதர்(28) தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக உள்ளார். இவருக்கும் ஹசன் ஷரீஃப் என்பவரின் மகளுக்கும் நாளை எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.

திருமண ஏற்பாடுகள் விரைவாக நடந்து வரும் நிலையில் திருமண பரபரப்பில் மாப்பிள்ளை வீட்டார் இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4-00 மணி அளவில் மணமகன் அப்துல்காதர் வீட்டு வாசலில் டம் என பலத்த சத்தத்துடன் பாட்டில் வெடித்தது. இதனால் வாசல் திரைச்சீலை தீப்பற்றி எரிந்தது.

சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே வந்த அப்துல்காதர் வீட்டார் வீட்டின் திரைச்சீலை எரிவதை பார்த்து உடனடியாக தீயை அணைத்தனர். அப்போது மதுப்பாட்டில் ஒன்றில் திரிபோட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தியிருப்பது தெரியவந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்துல்காதர் யாரோ மர்ம நபர் இந்த செயலை செய்துள்ளார் என முடிவு செய்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆராய்ந்தனர்.

அப்போது ஒரு நபர் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்து செல்வது தெரியவந்தது. அந்த நபர் யார் என அப்துல்காதர் வீட்டாரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் அப்துல்காதர் திருமணம் செய்ய உள்ள மணமகளின் அக்கா கணவர் முதாசர் என தெரியவந்தது.

இதையடுத்து முதாசரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெறுவதை விரும்பாமல் நிறுத்தும் நோக்குடன் அவர் ஈடுபட்டாரா? வேறு எதுவும் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x