Published : 30 Jun 2018 01:17 PM
Last Updated : 30 Jun 2018 01:17 PM

விவசாயி தமிழரசன் தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: முத்தரசன்

காட்டுமன்னார்கோவில் அருகே வங்கிக் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்ட விவசாயி கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “விவசாய சாகுபடி பணிக்காக தனியார் வங்கியில் கடன் வாங்கிய காட்டுமன்னார்கோவில் வட்டம், கருனாகரநல்லூர் விவசாயி தமிழரசன் (48) கடன் வசூல் வன்முறையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாகவே விவசாயம் பொய்த்துப் போன நிலையில் கடனை கட்டமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதை தனியார் வங்கிகள் உணரவில்லை. இது போன்ற தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று இயங்குகின்றனவா என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. அரசின் கடனுதவி கிடைக்காததால் விவசாயிகள் சாகுபடி செலவுக்கு தனியாரையே சார்ந்து இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு, விவசாயி தமிழரசன் மரணத்திற்கு காரணமான தனியார் வங்கி அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.

விவசாயி தமிழரசன் பெற்ற கடனை முழுமையாக தள்ளபடி செய்ய வேண்டும். குடும்பத்தலைவரை இழந்துவிட்ட தமிழரசன் குடும்பத்திற்கு மறுவாழ்வு நிதிவழங்க வேண்டும். தனியார் வங்கி கடன்வசூலிக்கும் நடவடிக்கைக்கு அரசு வரைமுறை உருவாக்கி அறிவிக்க வேண்டும்” என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x