Published : 30 Jun 2018 10:20 AM
Last Updated : 30 Jun 2018 10:20 AM

கீழ்க்கட்டளையில் வீட்டுவசதி வாரியத்தில் குடியிருப்போருக்கு இடத்தை அளிக்க இயலாது: பேரவையில் துணை முதல்வர் விளக்கம்

கீழ்க்கட்டளையில் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் வசிப்பவர்களுக்கு அந்த இடத்தை அளிக்க இய லாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில், பல்லாவரம் தொகுதி திமுக உறுப்பினர் இ.கருணாநிதி, ‘‘பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கட்டளையில் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வரன்முறை செய்து அவர்களுக்கே அந்த இடத்தை வழங்கி, பத்திரப்பதிவு, பட்டா மாற்றம் செய்து தரவேண்டும். அப்பகுதியில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘நகர்ப்புறங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வீட்டுவசதி திட்டங்கள் அருகிடை திட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில்தான் பல்லாவரம் அருகிடை திட்டம் செயல் படுத்தப்படுகிறது. மொத்தமுள்ள 56.57 ஏக்கரில் 17.10 ஏக்கர் மட்டுமே தற்போது வீட்டுவசதி வாரியத்திடம் உள்ளது.

மீதமுள்ள 39.47 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள், ஆக்கிரமிப்புகள் உள்ளதால் நில எடுப்பு அலுவலர், வாரியத்திடம் நிலத்தை ஒப்படைக்கவில்லை. வாரியத்தில் ஒப்படைக்கப்பட்ட 17.10 ஏக்கர் நிலத்திலும் 10.55 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. மீதமுள்ள 6.55 ஏக்கர் நிலம் மட்டுமே காலியாக உள்ளது. அதில் மட்டுமே திட்டம் செயல்படுத்த முடியும்.

ஆனால், வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்போருக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அந்த இடத்தை வழங்க இயலாது. தற்போது 27 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் முடியும்போது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x