Published : 30 Jun 2018 10:17 AM
Last Updated : 30 Jun 2018 10:17 AM

`பீக் ஹவர்’ என காரணம் காட்டி பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் கால்டாக்ஸி நிறுவனங்கள்: புதிய சட்ட விதிகளை அரசு கொண்டு வருமா?

மக்களின் தேவையை வைத்து, `பீக் ஹவர்’ என கூறி கால்டாக்ஸி நிறுவனங்கள், கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றன. எனவே பிற மாநிலங்களில் இருப்பது போல், தமிழகத்திலும் கால்டாக்ஸிகளுக்கு புதிய சட்ட விதிகளை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்து கின்றனர்.

தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் சொகுசாக பயணம் செய்யும் வகையில் நேரடியாகவும், போன் மூலமும், இன்டெர்நெட் மூலமும் வாகனங்களை அழைக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். ஆனால், ஆட்டோக்களுக்கு இருப்பது போல், கால்டாக்ஸிகளுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. இதனால், கால்டாக்ஸி நிறுவனங்கள் அடிக்கடி கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கால்டாக்ஸி செயலிகளை ஆரம்பத்தில் பயன்படுத்தும்போது சில சலுகைகளை அறிவிக்கிறார்கள். ஆட்டோவை விட இதில் கட்டணம் குறைவாக இருக்கிறது. ஆனால், ஓரிரு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தும்போது கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கிறார்கள். உதாரணத்துக்கு வழக்க மான நேரங்களில் சாதாரணமாக ரூ.200 வசூலிக்கும் இடத்துக்கு ரூ.1000 வரையில் உயர்த்தி வசூலிக்கிறார்கள்.

காரில் பயணிக்கும்போது இதுபற்றி தெரிவிப்பதில்லை. நாமும் வழக்கமான கட்டணம்தானே வரும் என்று நினைத்து பயணம் செய்கிறோம். பயணம் முடிந்து கட்டணத் தொகையை பார்த்தால் அதிர்ச்சியடைகிறோம். இதுபற்றி கேட்டால், ‘பீக் ஹவர்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துதான் இருக்கும்’ என ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இது ஓட்டுநர்களின் தவறாக இருக்குமோ என நினைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் புகார் அளித்தோம். ஆனால், அவர்கள் இதில் எந்த தவறும் இல்லை என மறுக்கிறார்கள்.

பெங்களூருவில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால், பன்னாட்டு கால்டாக்ஸி நிறுவனங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு, கட்டணத்தை ஒழுங்குபடுத்தி இயக்கியதால், மீண்டும் கால்டாக்ஸிகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. தமிழக அரசும் கால்டாக்ஸிகளுக்கு புதிய விதிமுறைகளை வகுத்து, கட்டணத்தையும் நிர்ணயிக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக போக்கு வரத்து ஆணையரக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கால்டாக்ஸிகளுக்கான புதிய விதி முறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. கால்டாக்ஸிகளுக்கு தனி உரிமம், ஓட்டுநர்களுக்கு தனி சீருடைகள், ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும், கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட முக்கிய விதிமுறைகள் இதில் இருக்கும். அடுத்த ஓரிரு மாதங்களில் தமிழக அரசு புதிய விதி முறைகளை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x