Published : 30 Jun 2018 08:13 AM
Last Updated : 30 Jun 2018 08:13 AM

சுங்கக் கட்டணம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி சண்முகப்பா தகவல்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் ரத்து செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட முன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்தை குறைக்க வேண்டும், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 20-ம் தேதி முதல் நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என தென் மண்டல லாரி உரிமையாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்தார்.

இதுதொடர்பாக, சேலம் கொண்டலாம்பட்டியில் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்தை குறைக்க வேண்டும். டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும். லாரிகளுக்கான வருமான வரியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய 4அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து ஏற்கெனவே, திட்டமிட்டபடி வரும் ஜூலை 20-ம் தேதி முதல் நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

68 லட்சம் லாரிகள் பங்கேற்கும்

லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் இந்தியா முழுவதும் 68 லட்சம் லாரிகள் இயங்காது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறது. இதனால், அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வருமானம் கிடைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாறாக லாரி மற்றும் டாக்சி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆண்டொன்றுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை முன்கூட்டியே செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால், மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதை இந்தியா முழுவதும் கைவிடும் வரை எங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்.

எனவே, மத்திய அரசு லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடம் கொடுக்காமல், எங்களை அழைத்து பேச வேண்டும். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். இதில் சுமுக தீர்வு காணாத பட்சத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் திட்டமிட்டப்படி நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x