Published : 30 Jun 2018 08:07 AM
Last Updated : 30 Jun 2018 08:07 AM

தூத்துக்குடி சம்பவத்துக்கு ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினரே காரணம்: சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் புகார்

‘‘தூத்துக்குடி வன்முறை சம்பவத்துக்கும் மீனவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, உணர்வுகளைத் தூண்டி மே 22 போராட்டத்தில் பங்கேற்க செய்தனர்’’ என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் நேற்று மனு அளித்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மீனவ சமுதாயத்தினர் நேற்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர், திரேஸ்புரம் பகுதி நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராபர்ட் வில்லவராயர் தலைமையில் சங்குகுளி தொழிலாளர் மற்றும் மீனவர் சங்கச் செயலாளர்கள் இசக்கிமுத்து, முகமது மைதீன், ரகுமான், பரமசிவன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளரான சார்பு நீதிபதி ஆர்.சாமுவேல் பெஞ்சமினை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த மார்ச் 24-ம் தேதி உயர் நீதிமன்ற அனுமதியோடு நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் மீனவ மக்களே அதிகளவில் கலந்து கொண்டார்கள். இதில் துளி அளவுகூட வன்முறை ஏற்படவில்லை.

கிராமங்களில் ஊடுருவினர்

மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 2 வழக்கறிஞர்கள் கிராமங்களில் ஊடுருவி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டமைப்பை உருவாக்கி, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் மாதா கோயில் பகுதி, பாத்திமா நகர், புதுத்தெரு, குரூஸ்புரம், திரேஸ்புரம் பகுதிகளில் மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் குறித்து பிரச்சாரம் செய்தார்கள்.

மே 20-ம் தேதி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் மீனவ அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டோம். அதில், மே 22-ல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்க எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு நாங்களும் சம்மதம் தெரிவித்தோம். ஆனால், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 2 வழக்கறிஞர்கள் சமூக வலைதளங்களிலும் நேரடியாகவும், பெண்கள், இளைஞர்கள் மனதில் எதிர் கருத்துகளைப் பரப்பி, உணர்வுகளைத் தூண்டினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதே நம்முடைய ஒரே நோக்கம். காவல் துறையின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள தயாராகுங்கள் என பெண்களையும் ஆக்ரோஷமாக பேச விட்டு வேடிக்கை பார்த்தனர்.

அவர்கள் வழிநடத்தி செல்வார்கள் என நம்பியே மீனவ மக்களும், பொதுமக்களும் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தைப் புறப்பட செய்யும் வரை பொதுமக்களோடு இருந்த இந்த திடீர் தலைவர்கள், 13 பேர் படுகொலை செய்யப்பட்டபோதும், அதன் பிறகும் எங்கே இருந்தார்கள்? இந்த திடீர் தலைவர்களில் ஒருவருக்குகூட சிறிய காயம் எதுவும் ஏற்படவில்லையே எப்படி?

தற்போது அந்த 2 வழக்கறிஞர்களும் தங்களை காத்துக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே 22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றன என்றும், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்வைப்பதாக அறிகிறோம்.

பாதுகாப்பு அளிக்க வேண்டும்

காவல் துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மீனவ மக்கள் மீது வழக்குகள் பதிய தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்து இதனால் அமைதியற்ற சூழலில் பய உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம். எனவே, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு எங்களுக்கு சட்ட உதவிகள் செய்து, பாதுகாப்பு அளித்திட வேண்டும். இனிமேல் அனுமதி பெறாத எந்த போராட்டத்திலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x