Published : 30 Jun 2018 08:06 AM
Last Updated : 30 Jun 2018 08:06 AM

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக ‘ஹெலிகேம்’ மூலம் விளைநிலங்களில் ஆய்வு

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக விளைநிலங்களில் ‘ஹெலிகேம்’ மூலம் ஆய்வு பணியில் நேற்று அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சேலம்- சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிகளைக் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 36.3 கிமீ தொலைவுக்கு நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி கடந்த 18-ம் தேதி தொடங்கி கடந்த 25-ம் தேதியுடன் முடிவடைந்தது.

நிலம் அளவீடு

சேலம் மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாய் பகுதியில் ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர், குப்பனூர், மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம், சின்னகவுண்டாபுரம், வரகம்பாடி, எருமாபாளையம், கெஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, பூலாவரி, அரியானூர் வரையிலான அனைத்து இடங்களிலும் நிலங்கள் அளவீடு செய்து, முட்டுக்கல் நடப்பட்டுள்ளது.

தற்போது, சேலம், தருமபுரி மாவட்டங்களில் பசுமை வழி சாலைக்காக நிலங்கள் அளவீடு செய்து, முட்டுக்கல் நடப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டாந்தரை, விளைநிலங்கள், தரிசு நிலங்கள், அரசு கரடு புறம்போக்கு, காப்புக்காடுகள், வீடு, கிணறு, தொன்னந்தோப்பு, கால்நடை பண்ணை ஆகியன குறித்து ‘ஹெலிகேம்’ மூலம் துல்லியமாக வீடியோ பதிவு செய்திடும் பணியில் நில அளவீடு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ‘ஹெலிகேம்’ வானில் பல அடி தூரம் உயரே பறந்து பசுமை வழிச்சாலை வழித்தடங்களை வீடியோ பதிவு செய்கிறது. குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, நாழிக்கல்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

8 வழிச் சாலையில் குறுக்கிடும் சிறு கால்வாய், ஆறுகள், மலை பிரதேசங்கள் உள்ளிட்டவையும் நில அளவீடு குழுவினர் பதிவு செய்து, உயர் அதிகாரிகளிடம் இக்காட்சி பதிவை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விவசாயிகள் சோகம்

பசுமை வழிச்சாலைக்கான திட்டப்பணி அதி விரைவாக நடந்து வருவதால், விவசாயிகள் ‘ஹெலிகேம்’ வீடியோ ஆய்வு பணியை கவலையுடன் பார்த்து வருகின்றனர்.

தற்போது, விளைநிலங்களில் மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சில மாதங்களில் அறுவடை செய்திடுவதற்கு முன்பாகவே, நிலங்களை பறிகொடுக்க வேண்டுமோ என்ற சோகத்தில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விவசாயிகளின் ஒட்டுமொத்த கருத்துகளையும் கேட்காமல், அவர்களின் ஆட்சேபனையைப் பற்றி எவ்விதத்திலும் அதிகாரிகள் கவனம் கொள்ளாமல், அடுத்தடுத்த நடவடிக்கை எடுத்து வருவது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x