Published : 29 Jun 2018 09:25 PM
Last Updated : 29 Jun 2018 09:25 PM

மாதவரத்தில் சோகம்: தற்கொலை செய்த தாயின் பிரிவு தாங்காமல் மகனும் தூக்கிட்டு உயிர் நீத்த பரிதாபம்

மாதவரம் அருகே கணவன் வாங்கிய கடனை அவரது திடீர் மறைவால் கட்டமுடியாமல் போன பெண், கடன் கொடுத்த  வங்கியின் நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தாயார் தூக்கிட்டு இறந்ததை கண்ட மகனும் தாய் தூக்கிட்டு இறந்த சேலையிலேயே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேட்டில் வசித்தவர் பிரித்விராஜ்(54) இவருக்கு இந்திராணி(46) என்ற மனைவியும், மகன் தியாகராஜன்(24), மற்றும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி கணவருடன் தனியே வசிக்கிறார்.

பிரித்விராஜ் குடும்பத்துக்கு முக்கிய ஆதாரமாக இருந்தார். குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென இடிவிழுந்தது போல் ப்ரித்விராஜ் மரணமடைந்தார். இதனால் குடும்பத்தின் மொத்த பாரமும் மகன் தியாகராஜன் மீது விழுந்தது.

தந்தையின் மறைவு ஏற்பட்ட சோகத்தில் குடும்பம் மெல்ல தலையெடுத்து தியாகராஜன் மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு செல்ல துவங்கினார். தாயாரின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த தியாகராஜன் தந்தையின் மறைவு சோகத்திலிருந்து தாயை மீட்டு வர தன்னால் மட்டுமே முடியும் என நம்பி வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் அந்த குடும்பத்துக்கு அடுத்த நெருக்கடியாக தனியார் வங்கி வடிவில் வந்துள்ளது. தியாகராஜனின் தந்தை ப்ரித்விராஜ் உயிருடன் இருக்கும்போது தனியார் வங்கியின் கிரெடிட் கார்டில் ரூ 2 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். அவர் திடீரென மறைந்தவுடன் வங்கி நிர்வாகம் பணத்தை கட்ட நிர்பந்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் தாயும், மகனும் மன உலைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை பணிக்கு சென்ற தியாகராஜன் மாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்குள்ளே வந்த அவர் தாயாரை காணாமல் தேடியுள்ளார், அப்போது அவர் அதிர்ச்சியூட்டும் காட்சியை பார்த்துள்ளார். தாயார் இந்திராணி அறைக்குள் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறி துடித்துள்ளார்.

தாயார் மறைந்த துக்கத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தாயாருக்கு பிறகு இந்த உலகத்தில் தனக்கு யார் இருக்கிறார்கள், யாருக்காக வாழவேண்டும் என்று நொடிப்பொழுதில் முடிவெடுத்த தியாகராஜன் தூக்கிட்டு தொங்கிய தாயாரின் உடலை எடுத்து கீழே கிடத்திவிட்டு அதே சேலையில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

தாயாருக்கும், சகோதரருக்கும் போன் செய்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்த இந்திராணியின் மகள் வியாழக்கிழமை முழுதும் போன் செய்தும் இருவரும் போனை எடுக்காததால் குழம்பியுள்ளார். இரண்டு நாட்களாக போன் செய்தும் இருவருமெடுக்காததால் என்னவென்று பார்க்க நேராக கிளம்பி வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டில் தனது தாயும், சகோதரரும் உயிரிழந்து கிடப்பதை பார்த்து பதறி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸார் வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் தனியார் வங்கிகடன் பிரிவினரின் தொடர் நெருக்கடி காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x