Published : 29 Jun 2018 04:28 PM
Last Updated : 29 Jun 2018 04:28 PM

திருவல்லிக்கேணியில் போலீஸ் மீது தாக்குதல்: காவலரை தாக்கி கையை முறித்த 2 இளைஞர்கள் கைது

மெரினா கடற்கரை அருகே மதுபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரை தாக்கி கையை முறித்ததாக கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர், ரேஸ் செல்வோர், வழிப்பறியில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க கடந்த 10 நாட்களாக இரவு முழுதும் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் வழக்கம்போல் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். விவேகானந்தர் இல்லம் அருகே நேற்றிரவு அண்ணாசாலை பெண் காவலர் சபீதா, ஆயுதப்படை காவலர் சபரிகாந்த், வேப்பேரி காவல் நிலைய காவலர் மாரிக் கண்ணன் மற்றும் ஆயுதப்படை காவலர் சுரேந்திரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடற்கரை மணற்பரப்பிலிருந்து எஃப்.இசட் மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் இருவர் வேகமாக வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மது போதையில் இருந்த இருவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒத்துழைக்க மறுத்தனர். தொடர்ந்து தகாத வார்த்தைகளில் திட்டிய அவர்கள் தாக்கியதில் வேப்பேரி காவலர் மாரிக்கண்ணனின் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனடியாக போலீஸார் இருவரையும் பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். அவர்களுடைய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருவல்லிக்கேணி பெரிய தெருவை சேர்ந்த விக்னேஷ்(22), மற்றும் கஜபதிலால் முதல் சந்தில் வசிக்கும் மனோஜ்குமார்(24) என்பது தெரியவந்தது.

தாக்கப்பட்ட காவலர் ராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரது கையில் மாவுக்கட்டு போடப்பட்டது. காவலர் மாரிக்கண்ணு அளித்த புகாரின் பேரில் போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x