Published : 29 Jun 2018 03:55 PM
Last Updated : 29 Jun 2018 03:55 PM

புது வாழ்வுத் திட்டத்தில் 13 ஆண்டுகளாக உழைத்த பணியாளர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்

புது வாழ்வுத் திட்டத்தில் 13 ஆண்டுகளாக உழைத்த பணியாளர்களுக்கு வேலை இல்லை என்று சொல்வது அவர்களை வஞ்சிக்கும் செயல் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 2005-ல் துவங்கப்பட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் இயக்கத்தை உறுதி செய்த தனித்தன்மையும், தனிச்சிறப்பும் கொண்டது புதுவாழ்வுத் திட்டம்.

கிராமப்புறங்களின் பொருளாதாரத்தையும், பெண்களின் உழைக்கும் திறனையும் வெளிக்கொணர்ந்து அவர்களை பொருளாதார மேம்பாடு அடையச் செய்த திட்டம் புதுவாழ்வுத் திட்டம். மேலும், இளைஞர்களுக்கும் தொழிற் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.

இந்த புதுவாழ்வு திட்டம் அரசுக்கும், சுய உதவிக் குழுக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கும் ஒரு பாலமாக இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிறப்போடு பணியாற்றிவந்தனர்.

ஆனால், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான தமிழக அரசோ புது வாழ்வுத் திட்டம் தொடர்பாக ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு முற்றும் முரணான வகையில் செயல்பட்டு, டிஎன்ஆர்டிபி என்ற பெயரில் புதிய பணியாளர்கள் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.

இது 13 ஆண்டுகளாக இத்திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி. இச்செயல் கண்டனத்துக்குரியது. தனித்தன்மையோடு புது வாழ்வுத்திட்டம் செயல்பட்டால்தான் தாய்மார்களின் பொருளாதார ஏற்றமும், சமூக வளர்ச்சியும், கிராமப்புற மேம்பாடும் அமைந்திடும்.

அதற்கு மாறாக, புதுவாழ்வு திட்டத்தை நீர்த்துபோகச் செய்தும், 13 ஆண்டுகளாக உழைத்திட்ட அதன் பணியாளர்களை வேலை இல்லை என்று சொல்வதும் அவர்களை வஞ்சிக்கும் செயலாகும். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் அனைத்தையும் ஆதரிப்பதும், விரும்பிய திட்டங்களை அழிப்பதையுமே செய்யும் இந்த துரோக அரசு, ஜெயலலிதாவின் அரசு என்று சொல்வதை நிறுத்தவேண்டும்.

கிராமங்கள்தோறும் பணியாற்றிய புதுவாழ்வு திட்ட பணியாளர்களை கைவிடாமல், இதே திட்டத்தில் அவர்கள் பணியாற்றிட இந்த அரசு அவர்களை மீண்டும் பணியில் நியமித்திட வேண்டும். மேலும், போராட்டக் களத்தில் இருக்கும் அப்பணியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களிடம் உடனடியாக இந்த அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்” என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x