Published : 29 Jun 2018 04:00 PM
Last Updated : 29 Jun 2018 04:00 PM

சென்னை-சேலம் பசுமை வழிச் சாலைக்கு எதிரான வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சேலம் 8 வழிச்சாலை திட்டம், வனவிலங்குகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் நடக்க ஆய்வுக்குழு அமைக்கவேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை என்ற பெயரில் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முயன்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் வனவிலங்குகள், சுற்றுசூழல்பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என பொதுநல வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்ரமணியன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

“நிலம் கையகப்படுத்தும் முன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும், ஏற்கனவே சேலம் முதல் சென்னை இடையிலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ள நிலையில், காடுகளை அழித்து தார் சாலை அமைத்தால் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும்” என வழக்கறிஞர் சூரியபிரகாசம் வாதிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி சென்னை சேலம் 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து நேற்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் சூரியபிரகாசம் குறுக்கிட்டு, “சாலை திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் இயற்கை வளங்கள், வன விலங்குகள், நீர் நிலைகளை கையகப்படுத்தி திட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்பதாலேயே வழக்கு தொடர்ந்துள்ளோம்”, என தெரிவித்தார்.

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், இந்த வழக்கை, புதுக்கோட்டையில் நீர்நிலைகளின் குறுக்கே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பான மேல்முறையீடு வழக்குடன் இணைத்து பட்டியலிடுவதாகவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இரு வழக்குகளும் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது குறித்து விரிவான உத்தரவை பிறப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x