Published : 29 Jun 2018 03:19 PM
Last Updated : 29 Jun 2018 03:19 PM

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தருகிறது: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவர் ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தந்ததாக, முதல்வர்வெடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புக் குழுவுக்கு தேவையான உதவிகளைச் செய்யவில்லை என அதன் தலைவர் ஐஜி பொன். மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது குறித்து, இன்று (வெள்ளிக்கிழமை) சட்டப்பேரவையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராமசாமியும் பேரவையில் கேள்வி எழுப்பினர்.

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் ஏற்கெனவே ஒரு காவல் துறை கண்காணிப்பாரும், ஐந்து ஆய்வாளர்களும், மூன்று உதவி ஆய்வாளர்களும், நான்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களும், 16 காவலர்களும் என மொத்தம் 29 நபர்கள் பணிபுரிந்து வந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பொன் மாணிக்கவேல், சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் காவல் துறைத் தலைவர் திருச்சி சிறப்பு முகாம் அலுவலகத்திற்கு கூடுதலாக கேட்ட 7 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும், 10 காவல் துணை கண்காணிப்பாளர்களும், 18 ஆய்வாளர்களும், 50 உதவி ஆய்வாளர்களும், 140 தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 325 அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.

மேலும், அவர் கேட்ட ஒரு இன்னோவா கார், 2 பொலீரோ ஜீப், 2 டெம்போ டிராவலர், 10 மோட்டார் சைக்கிள், 17 வாக்கி-டாக்கி மற்றும் அலுவலகத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் 35 லட்சத்து 39 ஆயிரத்து 857 ரூபாய் செலவில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் திருச்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் அயற்பணியில் உள்ளார். தூத்துக்குடியில் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக காவல் அதிகாரிகள் தேவைப்பட்டதால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமை சில நாட்களுக்கு அவசர நிமித்தமாக அனுப்பக் கோரி, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவர் பொன் மாணிக்கவேலுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர், புலன் விசாரணைக்கு தேவைப்படுவதால், அவரை விடுவிக்க இயலாது என்று பொன் மாணிக்கவேல் கூறியதன் பேரில், அவர் தூத்துக்குடிக்கு அனுப்பப்படவில்லை. அவர் தற்போதும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் தான் பணிபுரிந்து வருகிறார்.

மேலும், காவல் துறை உயர் அதிகாரிகள் நடத்தும் ஆய்வுக் கூட்டத்தில், நிலுவை வழக்குகளின் முன்னேற்றம் குறித்த புள்ளி விவரங்கள் ஆய்வு செய்யப்படும். இதுபோன்ற ஆய்வுகள், அனைத்து காவல் துறைப் பிரிவுகளிலும் மாதாமாதம் நடைபெறும் வழக்கமான நடைமுறைதான். இவ்வாறான ஆய்வுக் கூட்டங்களிலும், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தலைவர் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவு விசாரணையில், இந்து சமய அறநிலையத் துறை முழுமையான ஒத்துழைப்பு அளிக்கின்றது. மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என சிலை திருட்டு தடுப்புப் பிரிவினால் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இக்கோரிக்கைகள் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக வரம்பிற்கு உட்பட்ட விஷயங்களாக இருப்பதால், அதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறையால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆணையுறுதி ஆவணத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா துறைகளிலுமே உயர் அதிகாரிகள், அவர்களுக்கு கீழ் பணிபுரிகின்ற அதிகாரிகளை விளக்கம் கேட்டால் விளக்கம் தருவது வழக்கம். அதன் அடிப்படையிலே, பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்திலே உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நீதிமன்றத்திலே நீதிபதி, உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டால் தாராளமாக தரலாம் என்ற செய்தியும் சொல்லியிருக்கின்றனர்.

அதேபோல, அதிமுக ஆட்சியில் தான் சிலை திருட்டு போனது போலவும், நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது போலவும், காங்கிரஸ் எதிர்க்கட்சி சட்டப்பேரவைத் தலைவர் குறிப்பிட்டார். நாங்கள் எப்போதுமே தெய்வ பக்தி உடையவர்கள். நானும் தெய்வ பக்தி உடையவன். ஆகவே, உங்களுக்கு அந்த மாறுபட்ட கருத்தே தேவையில்லை. சிலை திருட்டு தடுப்புப் பிரிவை உருவாக்கிய ஆட்சியே அதிமுக ஆட்சி தான். 1983ஆம் ஆண்டு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு என்ற ஒரு பிரிவினை அப்போதிய முதல்வர் எம்.ஜி.ஆர் ஆரம்பித்தார்.

20, 30 ஆண்டுகளுக்கு முன்பு களவுப் போன சிலைகள் எல்லாம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக தான், எம்.ஜி.ஆர். சிலை திருட்டு தடுப்பு பிரிவினை ஏற்படுத்தியதோடு, அந்த கோயில்களில் இருக்கின்ற சிலைகளை எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அந்த காலக் கட்டத்திலேயே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், கோயில்களில் உள்ள உலோகச் சிலைகள், ஆபரணங்கள், உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றவை மற்றும் இதர விலை உயர்ந்தவைகளைப் பாதுகாத்திட, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு தனி அமைப்பை கோயில் பாதுகாப்புப் படை என காவல் துறையில் ஏற்படுத்தி, கிரேடு 2 நிலையிலுள்ள 1,000 காவலர்களையும், 3,000 முன்னாள் ராணுவத்தினரையும் தமிழ்நாட்டிலுள்ள பல கோயில்களில் பணியமர்த்தப்பட்டார்கள். கடத்தப்பட்ட பல சிலைகளை கண்டுபிடித்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, காவல்துறை தலைவர் பொன் மாணிக்கவேல் இடம் மாற்றம் செய்யப்பட்டது ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான். 2012 ஆம் ஆண்டு அவர் இந்த பணியிலே அமர்த்தப்பட்டார். அப்போது டிஐஜியாக பணி செய்து கொண்டிருந்தார். 2015-ல் பணி உயர்வு வழங்கப்பட்ட போது, ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டபோது, அந்த துறையிலேயே தொடர்ந்து இருந்தார்.

ஐந்தரை ஆண்டு காலம் அதே துறையிலே இருந்தார். ஆகவே, பணியிடம் மாற்றுவது எல்லா ஆட்சியிலும் நடைபெறும் ஒரு சம்பவம். நீண்ட நாட்கள் பணியிலே இருந்ததால், பணி மாறுதல் செய்வார்கள். அந்த அடிப்படையிலே தான் அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார் தவிர, வேறு ஒன்றும் இல்லை.

அதுமட்டுமல்ல இந்த பணிமாற்றம் செய்கின்ற போது, ஒரு தனிநபர் ஒரு பகுதியிலே சிலை திருட்டு போய்விட்டது, அந்த சிலை திருட்டை இவர் இருந்தால் சரியாக கண்டுபிடிப்பார் என்று நீதிமன்றத்திலே சொன்னதின் காரணமாக, நீதிபதி இவரை நியமித்தார். ஆகவே, சிலை திருட்டு தடுப்புப் பிரிவிலே இவர் தொடர்ந்து இதை கூடுதலாக கவனிக்க வேண்டும் என்று தான் ஆணை பிறப்பித்தார்கள்.

ஆகவே, களவு போன சிலைகளை கண்டுபிடிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பொன் மாணிக்கவேல் கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டோம். அந்த சிலை திருட்டு தடுப்புப் பிரிவிலே கூடுதலாக காவலர்களை கேட்டார்கள், கொடுத்துவிட்டோம். வாகனங்கள் கேட்டார்கள், கொடுத்து விட்டோம். ஆகவே, எல்லாமே கொடுத்துவிட்டோம், எதுவும் கொடுக்காமல் இல்லை.

நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களுக்கு கூடுதலான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலே, அவர்கள் கேட்ட கோரிக்கைகள் எல்லாம் அரசு செய்து கொடுத்திருக்கிறது.

திமுக ஆட்சி காலத்தை விட, அதிமுக ஆட்சியில் தான் அதிகமான சிலை கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. திமுக ஆட்சியிலே எவ்வளவு வசதி செய்து கொடுக்கப்பட்டது? அப்போது 29 பேர் தான் இருந்தார்கள். ஆகவே, இது பல ஆண்டுகளுக்கு முன்பு களவு போன சிலைகள். ஆகவே, அதையெல்லாம் கண்டு பிடிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருந்தாலும், தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் அடிப்படையிலேயே மீண்டும் பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அப்பொழுது நிறைய களவு போன சிலைகள் கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு அதையெல்லாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னால், தேவையான காவலர்கள், பிற வசதிகளை எல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்த நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலே, அவர்கள் வைத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி தந்திருக்கிறது.

இது இரண்டு துறை சம்பந்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் சம்பந்தப்பட்டது. ஆகவே, இதிலே எங்கெங்கெல்லாம் சிலைகள் களவு போய் இருக்கிறது என்று கண்டுபிடித்து வருகிறோம். அதிகமான சிலையை கண்டுபிடித்த அரசு அதிமுக அரசு, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x