Published : 29 Jun 2018 02:49 PM
Last Updated : 29 Jun 2018 02:49 PM

சிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி வரவேற்பு

நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்று கலைவளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டுகோள் வைத்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பிற்கு தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவரும், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவருமான  மு. சந்திரசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் (அக்டோபர் 1) அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவிப்பிற்கு, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பிலும், லட்சோபலட்சம் ரசிகர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்றைய நாளில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சிநாளாகக் கொண்டாடுவதுபோல, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாளை “கலை வளர்ச்சி நாள்” என அறிவித்து கொண்டாடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேhம்.

மணிமண்டபத்தில், அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி அமைக்கப்படவேண்டிய புகைப்படங்கள் எதுவும் இதுநாள்வரை வைக்கப்படாமல் உள்ளது. வரும் ஜூலை 21-ம் நாள் நடிகர் திலகத்தின் நினைவுநாள் வருகிறபடியால், நடிகர்திலகத்தின்

பல்வேறு புகைப்படங்களை மணிமண்டபத்தில் அமைக்க ஆவணசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நடிகர்திலகத்தின் சிலை தற்போது மணிமண்டபத்தின் உள்ளே கூண்டுக்குள் உள்ளதுபோல் இருப்பதால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சிறிதும் தெரிவதில்லை. மேலும், சிலையை மணிமண்டபத்தின் வெளியில் அமைத்தால், பொதுமக்கள் எப்போதும் பார்வையிடவும், மரியாதை செலுத்தவும் வசதியாக இருக்கும்.

எனவே, நடிகர்திலகத்தின் சிலையை மணிமண்டப வளாகத்தின் வெளியே அமைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x