Published : 29 Jun 2018 02:18 PM
Last Updated : 29 Jun 2018 02:18 PM

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரிகளே போதும் என்றால், தமிழகத்தில் குடியரசு ஆட்சியே போதுமே: ப.சிதம்பரம் கேள்வி

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளே போதும் என அமைச்சர்கள் முடிவு செய்தால் தமிழகத்திற்கு அமைச்சர்கள் எதற்கு கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாமே? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் மீண்டும் 2016-ல் உள்ளாட்சி தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் ஆறு மாதம் ஆறு மாதம் என மேலும் மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதை தள்ளிப்போட்டு தனி அதிகாரிகளை நியமித்து ஆட்சி நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படவில்லை. சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தனி அதிகாரிகள் மூலம் நிர்வாகம் நடக்கிறது.

இதனால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுகிறது, உள்ளாட்சிக்கு பிரதிநிதிகள் இல்லாததால் நடைபெறும் பணிகள் குறித்தோ மக்களுக்கான தேவைகள் குறித்தோ ஆய்வு செய்யவோ, நிறைவேற்றவோ, மக்கள் முறையீடு செய்யவோ யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் வைத்தும் உள்ளாட்சித்தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு மேலும் மேலும் தள்ளி வைக்கிறது. நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்தை எஸ்.பி.வேலுமணி கொண்டு வந்தார்.

இதை எதிர்க்கட்சித்தலைவர்கள் அனைவரும் கண்டித்துள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளே தேவை இல்லை என்றால் தமிழக அமைச்சர்கள் மட்டும் எதற்கு, அவர்களும் அரசை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை நடத்திவிட்டு போகலாமே என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பா.சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவு:

“தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை, தனி அதிகாரிகளே போதும் என்றால், தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும்?

அஇஅதிமுகவிற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லையென்றால், தமிழ்நாடு அரசில் ஏன் அமைச்சர்கள் இருக்க வேண்டும்?

தமிழ்நாடு அமைச்சர்கள் பதவி விலகி அதிகாரிகளிடம் (ஜனாதிபதி ஆட்சி) ஆட்சியை ஒப்படைக்கலாமே?”

என கருத்து தெரிவித்துள்ளார்.

இவரது கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் நெட்டிசன்கள் அவரது ட்விட்டரில் பதிலளித்துள்ளனர்.

ராஜசேகர் என்பவர் பதிலில் ” “புதுச்சேரியிலும்கூட உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படவில்லை, அங்கும் ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை நடத்தலாம்” என பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் கல் என்பவர் பதிலில் “அவர்கள் மக்கள் பிரதிநிதி என்று யார் சொன்னது” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மதன்வேலு என்பவர் பதிவில் “அப்புறம் யார் கமிஷன் வாங்கித்தருவா? அதற்கு உறுதி கொடுத்தால் பிரச்சினை இல்லை” என்று பதிலளித்துள்ளார்.

பா.பிரபாகரன் என்பவர் பதிலில் “முதலாளி உத்தரவுக்கு வெயிட்டிங்” என பதிலளித்துள்ளார். சாய்.கே எனபவர் பதிலில் “இந்த எம்.எல்.ஏ களையோ மந்திரிகளையோ மக்கள் எங்கே தேர்ந்தெடுத்தார்கள்? எல்லாம் மோடி வித்தை தான்” என பதிலளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x