Published : 29 Jun 2018 11:12 AM
Last Updated : 29 Jun 2018 11:12 AM

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை இன்னும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் உன்னத திட்டமான சத்துணவு திட்டத்தில் சுமார் 34 ஆண்டுகளாக தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் சத்துணவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர நீண்ட காலமாக தமிழக அரசை சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இச்சூழலில் கடந்த ஆட்சியில் ஊழியர் நலன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், சத்துணவு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகிய கோரிக்கைகள் குறித்து சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் 19.02.2016-ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.

குறிப்பாக பள்ளி இறுதி வகுப்பு முடித்தவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 34 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களைப் போலவே கல்வித் தகுதி பெற்ற இளநிலை உதவியாளருக்கு வழங்கப்படும் ஊதிய விகிதத்தில் அனைத்து படிகளையும் சேர்த்து சத்துணவு அமைப்பாளர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசின் 7 ஆவது ஊதிய மாற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும்.

8 ஆம் வகுப்பு கல்வித் தகுதி பெற்ற சமையலர் சிறப்பு காலமுறை ஊதியமாக அனைத்து படிகளும் சேர்த்து ரூ.5,884 பெறுகின்றனர். ஆனால் இதே கல்வித் தகுதி பெற்ற இரவு காவலர், தோட்டக்காரர் ஆகியோர் துவக்க நிலையிலேயே அனைத்து படிகளையும் சேர்த்து ரூ. 14,992 பெறுகின்றனர். எனவே இந்த ஊதியம் சமையல் உதவியாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.1,500 போதுமானதல்ல. எனவே அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் பாதித்தொகையும், அகவிலைப்படியும் சேர்த்து குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மேலும் கடைசியாக பெற்ற மொத்த ஊதியத்தில் பாதித்தொகையை கணக்கிட்டு பணிக்கொடை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் முன் வைக்கிறது.

எனவே தமிழக அரசு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக கலந்து பேசி, சுமூகத் தீர்வு ஏற்படுத்தி கொடுத்து, சத்துணவு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், அவர்களின் குடும்பங்கள் ஆகியோர் நலன் காக்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x