Published : 29 Jun 2018 09:59 AM
Last Updated : 29 Jun 2018 09:59 AM

அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க அரசு பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு மட்டுமே வாய்ப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 12 மாணவர்கள் மட்டுமே அரசுக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு உள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று தனித்தனியாக வெளியிடப்பட்டது. இதில், அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் 1-1000 வரையிலான முதல் ஆயிரம் இடங்களில் 4 பேரும், 1001-3000 வரை 8 பேரும், 3001-5000 வரை 16 பேரும், 5001-10000 வரை 76 பேரும், 10001-15000 வரை 157 பேரும், 15,001-25000 வரை 1,059 பேரும் இடம்பெற்றுள்ளனர். இதில், முதல் 3000 இடங்களில் இடம்பெற்றுள்ள 12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு வசதியாக அரசு சார்பில் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி மையங்கள் அமைத்து, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 1,337 பேர் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x