Published : 29 Jun 2018 09:57 AM
Last Updated : 29 Jun 2018 09:57 AM

அபராதம் விதிக்கப்படுவதை தவிர்க்க வருமான வரி முறையாக செலுத்த வேண்டும்: வருமான வரி முதன்மை ஆணையர் அறிவுறுத்தல்

வருமான வரியை முறையாக செலுத்தியும், வருமான வரி படிவத்தை குறித்த காலத்தில் தாக்கல் செய்தும் அபராதத்தை தவிர்க்க வேண்டும் என வருமானவரித் துறை முதன்மை ஆணையர் யஸ்வந்த் யு சவான் அறிவுறுத்தியுள்ளார்.

வருமானவரித் துறையின் முதன்மை வருமான வரி ஆணையர் அலுவலகம் சார்பில், நேற்று மாதவரத்தில் வருமான வரி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

இதில், வருமானவரித் துறையின் முதன்மை வருமான வரி ஆணையர் யஸ்வந்த் யு சவான், கூடுதல் வருமான வரி ஆணையர் ராதாகிருஷ்ணன், இணை ஆணையர் யமுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கில், மாதவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், மக்கள் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில், வருமான வரி செலுத்துவோர் கணக்கு வழக்குகளை முறையாக பராமரிப்பதன் அவசியம், முன் வரியை தீர்மானிக்கும் முறை, வரியை குறித்த காலத்தில் செலுத்தும் முறை, டி.டி.எஸ். மற்றும் டி.சி.எஸ். பிடித்தம் செய்யும் முறை, இணையம் மூலம் வருமான வரி செலுத்தும் முறை, வருமான வரி படிவங்களை தாக்கல் செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து, வருமானவரித் துறை அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், வருமானவரி செலுத்துவோர்களை, நட்போடு அணுகி, அவர்களின் குறைகளை தீர்க்கும் நடவடிக்கைகளில் வருமானவரித் துறை தொடர்ந்து செயல்படுகிறது என, கருத்தரங்கில் பங்கேற்ற அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கருத்தரங்கில், வருமானவரித் துறை முதன்மை வருமான வரி ஆணையர் யஸ்வந்த் யு சவான் கூறும்போது, “நாட்டின் வளர்ச்சியில் வருமான வரி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே, வருமான வரி செலுத்த வேண்டியவர்கள், அவசியம் வருமான வரியை செலுத்த வேண்டும். வருமான வரியை முறையாக செலுத்தியும், வருமான வரி படிவத்தை குறித்த காலத்தில் தாக்கல் செய்தும், அபராதத்தை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x