Published : 29 Jun 2018 09:56 AM
Last Updated : 29 Jun 2018 09:56 AM

தமிழக வனத் துறையால் உருவாக்கப்பட்ட சூழல் சுற்றுலா கொள்கையை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்

தமிழக வனத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலாக்கொள்கை 2017’ புத்தகத்தை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி விதி 110-ன் கீழ் பேசிய முதல்வர் கே.பழனிசாமி, ‘‘தமிழகத்தின் வன வளத்தை பாதுகாக்கவும், வன உணர்வை அனைவரிடமும் வளர்க்கவும் ‘தமிழ்நாடு சூழல்சார் சுற்றுலா கொள்கை 2017’ உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தமிழக வனத் துறை சார்பில், ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை’ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சூழல் சுற்றுலா கொள்கை புத்தகத்தை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டார். வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் தற்போது 58 சூழல் சுற்றுலா இடங்கள் உள்ளன. தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கையை செயல்படுத்த, ஒருங்கிணைக்கும் துறையாக வனத் துறை செயல்படும், மேலும், இக்கொள்கையின் நோக்கங்கள், திட்டங்களை செயல்படுத்த மாநில சூழல் சுற்றுலா வாரியம் என்ற சிறப்பு நிறுவனம்செயல்படும். இந்நிறுவனம் சூழல் சுற்றுலாவுக்கு உகந்த புதிய இயற்கை பகுதிகளை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்ததுல், சூழல் சுற்றுலா பயணிகளின் வருகையை முறைப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

சூழல் சுற்றுலா கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வனத்துறை செயலர் முகமது நசிமுத்தின், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ரவிகாந்த் உபாத்யாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x