Published : 29 Jun 2018 09:54 AM
Last Updated : 29 Jun 2018 09:54 AM

எஸ்ஆர்எம் பல்கலையில் 2 நாள் கருத்தரங்கு தொடக்கம்: ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்போம்- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஆட்டிசம் தொடர்பான 2 நாள் தேசிய கருத்தரங்கை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு நாம் உறுதுணையாக இருந்து, சமூகத்துடன் அவர்கள் ஒருமித்து வாழ துணைபுரிய வேண்டும் என்று அவர் கூறினார்.

சென்னை அடுத்த காட்டாங் கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக, ஆட்டிசம் தொடர்பான 2 நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான டி.ஆர்.பச்சமுத்து தலைமை தாங்கினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் குறைபாடாக ஆட்டிசம் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 160 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறது. உலகில் 70 லட்சம் குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இந்தியாவில் 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. ஆட்டிசம் குறைபாடு பற்றி தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இது நல்ல முயற்சி.

ஆட்டிசம் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்ய, பெற்றோர் போதிய பயிற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் தேவைகளை அறிந்து, அவர்களது உரிமைகளைப் பெற்றுத்தர அனைவரும் முயற்சிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, மற்ற குழந்தைகளுடன், சமூகத்துடன் அவர்கள் ஒருமித்து வாழ துணைபுரிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் ஆட்டிசம் தொடர் பான மலர் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழகத் தலைவர் பி.சத்யநாராயணன், துணைவேந்தர் சந்தீப் சஞ்செட்டி, இயக்குநர் என்.சந்திரபிரபா, மருத்துவர் கணபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x