Last Updated : 29 Jun, 2018 09:41 AM

 

Published : 29 Jun 2018 09:41 AM
Last Updated : 29 Jun 2018 09:41 AM

காவல்துறை சார்பில் இன்று மாபெரும் ரத்ததான முகாம்

தமிழக காவல்துறை சார்பில் இன்று மாநிலம் முழுவதும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. இதய நோய், சிறுநீரக பிரச்சினை, மஞ்சள் காமாலை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்ததானம் செய்யக்கூடாது என்று அரசு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று நடக்கவுள்ள ரத்ததான முகாம்களில் 20 ஆயிரம் காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் ரத்ததானம் செய்ய உள்ளனர். 20 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகள் சார்பில் ரத்ததான முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரத்ததானத்துக்கான நடைமுறைகள் குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:

ரத்ததானத்தை 18 வயது முதல் 65 வயது வரையுள்ளவர்கள் செய்யலாம். முதல் முறையாக ரத்ததானம் செய்பவர்கள் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தது 45 கிலோ உடல் எடை இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் மற்றும் ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்க வேண்டும். இந்த பரிசோதனைகளை செய்த பிறகுதான் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ரத்தத்தை எடுக்க வேண்டும்.

சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள் ரத்ததானம் செய்யக்கூடாது. அதேநேரத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை உட்கொள்பவர்களுக்கு ஹீமோகுளோபின், ரத்த அழுத்தம் போன்றவற்றில் பிரச்சினைகள் இல்லாமல் சரியாக இருந்தால் அவர்கள் ரத்ததானம் செய்யலாம். இதேபோல் இதய நோய்கள், சிறுநீரக பிரச்சினை, மஞ்சள் காமாலை, புற்றுநோய், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைக்கு தாய்பால் கொடுப்பவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது.

முன்பெல்லாம் மது குடித்தவர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னர்தான் ரத்ததானம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. தற்போது அந்த விதிமுறையில் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மது குடித்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவாகவும், சரியாகவும் பதில் அளித்தால், அவர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெறலாம் என்று உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் தெரிவித்துள்ளது. ரத்ததானம் செய்பவரிடம் இருந்து 350 எம்எல் (1 யூனிட்) ரத்தம் மட்டுமே எடுக்க வேண்டும். 55 கிலோ எடைக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து 450 எம்எல் அளவுக்கு ரத்தம் எடுக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x