Last Updated : 29 Jun, 2018 09:37 AM

 

Published : 29 Jun 2018 09:37 AM
Last Updated : 29 Jun 2018 09:37 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு பெற்றோர் - பிள்ளை உறவுமுறை சான்றிதழ் தேவையில்லை: மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல்

பெற்றோர் - பிள்ளை இடையே யான உறவுமுறை சான்றிதழை தமிழக அரசு வழங்குவதில்லை என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு அந்த சான்றிதழ் தேவையில்லை என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல் லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட 43,395 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது. கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளது.

தேவையான சான்றிதழ்கள்

இந்நிலையில் www.tnmedicalselection.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவி கள் நீட் தேர்வு எழுதிய ஹால்டிக்கெட், நீட் மதிப்பெண் கார்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஜாதி சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று ஆதார் கார்டு உள்ளிட்ட 9 ஆவணங் களுடன் 10-வது ஆவணமாக பெற்றோர் - பிள்ளை (விண்ணப்பதாரர்) இடையேயான உறவுமுறை சான்று கொண்டு வரவேண்டும்.

இதேபோல் பெற்றோர் தாங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிக்க தங்களுடைய பிறப்புச் சான்று, 10 அல்லது எஸ்எஸ்எல்சி, 12 மற்றும் பட்டப் படிப்புச் சான்று, இருப்பிடச் சான்று, ஜாதி சான்று, ஆதார் கார்டு, வருமானச் சான்று என மொத்தம் 8 சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். உரிய சான்றிதழ் இல்லையென்றால் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பெற்றோர் குழப்பம்

இந்நிலையில் பெற்றோர் - பிள்ளை இடையேயான உறவுமுறை சான்றிதழை எங்கே சென்று வாங்குவதென்று தெரியாமல் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் குழப்ப மடைந்துள்ளனர். இதேபோல், பெற்றோர் படிக்கவில்லையென்றால், அதற்கான சான்றிதழை யாரிடம் பெறுவது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெற்றோர் - பிள்ளை இடையே யான உறவுமுறை சான்றிதழை அரசு வழங்குவதில்லை. அப்படி இருக்கும் போது, அந்த சான்றிதழை எங்கே சென்று எப்படி வாங்க முடியும்?” என்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழுச் செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜனிடம் கேட்டபோது, “தமிழகத் தைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் 10, 12-வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட சில சான்றிதழ்களைக் கொண்டு வந்தாலே போதுமானது. பெற்றோர் – பிள்ளை இடையேயான உறவுமுறை சான்றிதழ் தேவையில்லை. வெளிமாநிலத்தில் படித்தவர்களும் அனைத்து சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டியதில்லை. இதனால், பெற்றோர், மாணவர்கள் குழப்பமடையத் தேவையில்லை. தங்களிடம் இருக்கும் சான்றிதழ்களுடன் வந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x