Published : 29 Jun 2018 08:14 AM
Last Updated : 29 Jun 2018 08:14 AM

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு கைதான 4 பேருக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல்: லட்சக்கணக்கில் பணம் பறிக்க திட்டமிட்டதாக தகவல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை ஜூலை 12-ம் தேதி வரை கோவை சிறையில் அடைக்க திருப்பூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

திருப்பூரைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் சிவமூர்த்தி (47). இவர், திருப்பூர் - ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையத்தில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி துர்கா வைஷ்ணவி. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் இளைய சகோதரியான பத்மினி மகள்தான் துர்கா வைஷ்ணவி.

கடந்த 25-ம் தேதி விமல் என்பவரின் அழைப்பை ஏற்று கோவைக்கு தனது சொகுசு காரில் சென்றுள்ளார் சிவமூர்த்தி. கோத்தகிரியில் பையிங் ஏஜென்ட் ஒருவர் இருப்பதாகக் கூறி, அன்னூரில் இருந்து சென்றுள்ளனர். காரமடை குறுந்தமலை அருகே விமலின் நண்பர்கள் எனக் கூறி கவுதமன் (22), மணிகண்டன் (எ) மணிபாரதி (22) ஆகியோரும் ஏறி உள்ளனர். மேலும், குறுந்தமலை முருகன் கோயில் பகுதியில் இருந்து மூர்த்தி (37) என்பவரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

செல்லும் வழியில் விமல் லட்சக்கணக்கில் பணம் கேட்டு சிவமூர்த்தியை மிரட்டியுள்ளார். பின்னால் அம்ர்ந்திருந்த கவுதமன், மணிபாரதி, மூர்த்தி ஆகியோர் சிவமூர்த்தியின் முகத்தை டேப்பால் சுற்றி, நைலான் கயிற்றால் கை, கால்களை கட்டி அடித்ததால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

போலீஸாரிடம் வாக்குமூலம்

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: சிவமூர்த்திக்கு தொழில் ரீதியாக விமலுடன் நல்ல நட்பு இருந்தது. இருவரும் அடிக்கடி சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். கடந்த 25-ம் தேதி விமலின் அழைப்பை ஏற்று, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ரிசார்ட்டுக்கு செல்ல சிவமூர்த்தி திட்டமிட்டிருந்தார்.

ரூ.50 லட்சம் பறிக்க திட்டம்

முன்னதாக, தொழில் செய்ய வேண்டி சிவமூர்த்தியிடம் லட்சக்கணக்கில் விமல் பணம் கேட்டுள்ளார். ஏற்கெனவே, தொழில் செய்தபோது உதவியதாக விமலிடம் சிவமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சிவமூர்த்தியை கடத்தி ரூ.50 லட்சம் வரை பணம் பறிக்க விமல், திட்டமிட்டுள்ளார். அதற்குள், சிவமூர்த்தி காருக்குள் உயிரிழந்ததால், சடலத்தை கல்லைக் கட்டி ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் வீசியுள்ளனர். பின்னர், அவரது சொகுசு காரை எடுத்துக்கொண்டு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

விமல் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து, அவரது நண்பரான மூர்த்தி, கவுதமன், மணிகண்டன் (எ) மணிபாரதி ஆகியோரிடம் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று காலை விசாரணை நிறைவடைந்த நிலையில், விமல் உட்பட 4 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.

திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

இந்நிலையில், திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி கவியரசு முன்னிலையில் நேற்று மாலை 4 பேரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x