Published : 29 Jun 2018 08:12 AM
Last Updated : 29 Jun 2018 08:12 AM

நாடு முழுவதும் அடுத்த ஆண்டுக்குள் 543 தபால் பாஸ்போர்ட் சேவா மையங்கள் தொடங்கப்படும்: மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ரூ.2.25 கோடியில் கட்டப்பட்டுள்ள தபால் நிலையம் திறப்பு, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 125-வது ஆண்டு சிறப்பு தபால்தலை வெளியீட்டு விழா ஆகியவற்றில், மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா பங்கேற்றார். அவர் பேசியதாவது:

இந்திய ரிசர்வ் வங்கி ஓரிரு நாளில், தபால் நிலையங்களில் வங்கி சேவை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கிவிடும். இதையடுத்து நாடு முழுவதும் 650 தபால் வங்கிகள் தொடங்கப்படும். இந்த தபால் வங்கிகள் 1.50 லட்சம் கிராமப்புற தபால் நிலையங்களுடன் இணைக்கப்படும்.

கடந்த 4 ஆண்டுகளில் இந்திய தபால்துறை பல மாற்றங்களை கண்டுள்ளது. நிதி, ஆதார், பாஸ்போர்ட் உட்பட பல சேவைகளை வழங்கி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் பாஸ்போர்ட் சேவையை பெற 50 கிலோ மீட்டர் சுற்றளவைத் தாண்டி செல்லக்கூடாது என்பதே பிரதமரின் திட்டமாகும். எனவே, 50 கிலோ மீட்டருக்குள் தபால் பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் 543 தபால் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் திறக்கப்படும். தபால்துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகியவை உள்ளன. பெரும்பாலான மக்களுக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இல்லை. குறைந்த பிரீமியத்தில் அதிக போனஸ் பெறமுடியும். இன்னும் 2 ஆண்டுகளில் தனியாக காப்பீட்டு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற ஊழியர்கள் குறைந்தபட்சம் 66 சதவீத அளவு ஊதிய உயர்வை பெறுவர் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x