Published : 29 Jun 2018 08:08 AM
Last Updated : 29 Jun 2018 08:08 AM

நடிகர் சங்க நிலத்தை விற்பனை செய்ததாக புகார்: நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உட்பட 4 பேர் மீது காஞ்சி போலீஸ் வழக்கு

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை ஒப்புதல் பெறாமல் விற்பனை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட 4 பேர் மீது காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கூடுவாஞ்சேரியை அடுத்த வேங்கடமங்கலம் பகுதியில் கடந்த 1986-ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த ராதாரவி, கீர்த்திராஜ் என்பவரிடம் இருந்து நடிகர் சங்கத்துக்காக 26 சென்ட் இடத்தை வாங்கியுள்ளார். பின்னர் 1996-ல் இந்த இடத்துக்கு வேறு ஒருவரிடம் பவர் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் இந்த இடம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப் பட்டுள்ளது.

நிர்வாகிகள் புகார்

இந்த இடம் நடிகர் சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு ஒப்புதல் பெறாமல் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் தற்போதுள்ள நடிகர் சங்க நிர்வாகிகள் புகார் கூறி வந்தனர். இது தொடர்பாக நடிகர் சங்கப் பொதுச்செயலர் நடிகர் விஷால், காஞ்சிபுரம் வடக்கு மண்டல ஐ.ஜி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளித்தார். ஆனால் இந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

உயர் நீதிமன்றம் உத்தரவு

அதனால் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்தப் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரை கடந்த மே மாதம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் சந்தித்தார். அவர் நடிகர் சங்கம் சார்பில் தங்களிடம் உள்ள ஆவணங்களைக் காவல்துறையினரிடம் தாக்கல் செய்தார். இதுதொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக தற்போது நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, நடேசன், செல்வராஜ் ஆகிய 4 பேர் மீது ஐ.பி.சி 465, 468, 471, 420 ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின்போது பதில்

இந்த வழக்கு குறித்து நடிகர் சரத்குமாரிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு. இதுகுறித்து கருத்து சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன். விசாரணையின்போது நீதிமன்றத்தில் தகுந்த பதில் அளிப்பதுதான் சரியாக இருக்கும்’’ என்றார்.

பழிவாங்கும் படலம்

வழக்கு தொடர்பாக நடிகர் ராதாரவி கூறியதாவது: இது பழி வாங்கும் படலம். தற்போதுள்ள நடிகர் சங்க நிர்வாகிகள் இதற்கு முன்பு ஒருமுறை இதேபோல புகார் அளித்தனர்.

வருகிற ஆகஸ்ட் 16- ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது. அதில் நாங்கள் கலந்துகொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில், எங்கள் ஆதரவாளர்கள் அத்தனை பேருக்கும் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தமுறை நாங்கள் தேர்தலில் நிற்கிறோமோ? இல்லையோ? அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பயமே எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இந்த வழக்கை நீதிமன்றம் வழியே எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு ராதாரவி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x