Published : 29 Jun 2018 08:06 AM
Last Updated : 29 Jun 2018 08:06 AM

நஷ்டம் காரணமாக மூடப்பட்ட கூட்டுறவு சங்க நூற்பாலைகளை திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

பேரவையில் கேள்வி நேரத்தின்போது, காஞ்சி தொகுதி திமுக உறுப்பினர் எழிலரசன் பேசும்போது, “காஞ்சியில் உள்ள வையாவூர் கூட்டுறவு நூற்பாலை 2012-ல் நஷ்டம் காரணமாக மூடப்பட்டது. அந்த ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேசியதாவது:

வையாவூர் கூட்டுறவு நூற்பாலை ரூ.70 கோடியே 25 லட்சம் நஷ்டத்தில் இயங்கி வந்தது. சொத்துகளின் மதிப்பை விட நஷ்டம் அதிகரித்ததால் அந்த ஆலை மூடப்பட்டது. அதில் பணியாற்றிய 146 பேரில் ஒருவர் தவிர மற்றவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆலை அமைந்திருந்த 46 ஏக்கர் நிலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது. எனவே ஆலையை திறக்கும் சாத்தியம் அறவே இல்லை.

மேலும், தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 6 கூட்டுறவு ஆலைகள் ரூ.175 கோடியில் நவீனமயமாக்கப்பட்டன. இருப்பினும் அந்த ஆலைகள் மிகுந்த கடனில் செயல்பட்டு வருகின்றன. பருத்தி விலை தற்போது ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.49 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. இந்த 6 ஆலைகளை இயக்குவதற்காக ரூ.485 கோடி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலவச வேட்டி சேலை, மாணவர்களுக்கான சீருடையை 2 ஜோடிகளில் இருந்து 4 ஜோடிகளாக உயர்த்தியதன் மூலம், அந்த ஆலைகளுக்கு பணி வழங்கி நூல் பெறப்படுகிறது. இந்த 6 ஆலைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில், மூடப்பட்ட ஆலைகளை திறக்கும் எண்ணம் இல்லை.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ். மணியன் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x