Published : 29 Jun 2018 08:03 AM
Last Updated : 29 Jun 2018 08:03 AM

காவலர்கள் அளிக்கும் ரத்தம் ஒரு சொட்டுகூட வீணாகாது: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

காவலர்கள் தன்னார்வத்துடன் அளிக்கும் ரத்தத்தில் ஒரு சொட்டு கூட வீணாகாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், மயிலம் தொகுதி திமுக எம்எல்ஏ மாசிலாமணி பேசும்போது, “தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் காவல்துறையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் ரத்ததானம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர்களில் 50 சதவீதம் பேர் ரத்தம் அளித்தாலும் கிடைக்கும் 60 ஆயிரம் யூனிட்கள் ரத்தத்தை சேமிக்கும் வாய்ப்பு தற்போது இல்லை. இவற்றில் உள்ள சிவப்பணுக்களை 45 நாட்கள், தட்டணுக்களை 5 நாட்கள், பிளாஸ்மா செல்களை ஒரு வாரம் மட்டுமே பாதுகாக்க முடியும். எனவே, இந்த ரத்ததான முகாம் அவசியமா? இதற்கு பதில் அவர்களின் பெயர்கள், ரத்த வகையை கேட்டுப் பெற்று தேவைப்படும் போது பயன்படுத்தலாமே?’’ என்றார்.

இதற்கு பதிலளித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

தமிழகத்தில் 89 அரசு ரத்த வங்கிகள் உள்ளன. 393 ரத்த சேமிப்பு மையங்கள் உள்ளன. காவலர்கள் தாமாக முன்வந்து ரத்தம் அளிப்பது நல்ல விஷயம். 20 ஆயிரம் பேர் தற்போது ரத்தம் அளிக்க உள்ளனர். அந்த ரத்தம் 100 சதவீதம் பாதுகாக்கப்படும்.

ஓராண்டு வரை சேமிக்கும் வசதி

தமிழகத்தில் தற்போது 33 ஆயிரம் முதல் 35 ஆயிரம் யூனிட் வரை சராசரியாக ரத்தம் தேவைப்படுகிறது. இதுதவிர, பிளாஸ்மா செல்களை ஒரு வாரம் அல்ல; ஓராண்டுவரை சேமிக்கும் வசதி உள்ளது. எனவே, 20 ஆயிரம் பேர் அளிக்கும் ரத்தத்தை பாதுகாத்து பயன்படுத்த முடியும். ரத்த தான முகாமில் கிடைக்கும் ரத்தத்தில் ஒரு சொட்டுகூட வீணாகாமல் பயன்படுத்தப்படும். மேலும், ரத்தம் அளிக்கும் 20 ஆயிரம் பேரும் ரத்ததானத்துக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் தேவையான போது வந்து ரத்தம் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x