Published : 29 Jun 2018 07:59 AM
Last Updated : 29 Jun 2018 07:59 AM

பேரவைத் துளிகள்: பேரவை குழுக்களுக்கு தேர்தல்

பேரவை குழுக்களுக்கு தேர்தல்

சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழுவுக்கு தலா 16 உறுப்பினர்கள், அவை உரிமைக் குழுவுக்கு 14 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு ஜூலை 4-ம் தேதி பகல் 12 மணிக்குள் பேரவைச் செயலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அன்று மாலை 4 மணிக்கு வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும். மனுக்களை ஜூலை 5-ம் தேதி காலை 10 மணிக்குள் திரும்பப் பெறலாம். தேவையைவிட அதிக உறுப்பினர்கள் மனு தாக்கல் செய்திருந்தால், தேர்தல் நடத்துவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.

வரிசெலுத்துவோர் அதிகரிப்பு

வணிகவரி, சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது திமுக உறுப்பினர்கள் பி.மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர், ‘‘ஜிஎஸ்டியால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மன உளைச்சலும் ஏற்படுகிறது’’ என்றனர். இதற்கு பதில் அளித்த மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘ஜிஎஸ்டி செலுத்துவது எளிமையானது. ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழக அரசு போராடி பல பொருட்களுக்கு வரியைக் குறைத்துள்ளது. ஜிஎஸ்டியில் பதிவு செய்துகொண்டால் வணிகர்கள் பல்வேறு சலுகைகளைப் பெற முடியும்’’ என்றார். வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ‘‘ஜிஎஸ்டி அமலான பிறகு கடந்த ஓராண்டாக வணிகவரித் துறை சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. இ-வே பில் உள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனை மட்டுமே தற்போது நடக்கிறது. ஜிஎஸ்டி அமலான பிறகு தமிழகத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 23 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது’’ என்றார்.

தமிழ் இருக்கைகளின் நிலை என்ன?

‘‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்’’ என்று விதி 110-ல் முதல்வர் அறிவித்தார். பின்னர் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி. இதுவரை வெளிநாடு, உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இருக்கைகள் எவ்வாறு செயல்படுகின்றன? அதன் நிலை என்ன என்பதை தமிழக அரசு ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x