Published : 29 Jun 2018 07:56 AM
Last Updated : 29 Jun 2018 07:56 AM

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் ஆய்வு இருக்கை: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

எதிர்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், தமிழ்ச் சமூகத்துக்குப் பாடுபட்டவர்களின் வாழ்வியலில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் பன்முக நோக்கில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், சமூகத்தின் மீதான அவரது ஆழ்ந்த அக்கறை, கலைத்தொண்டு, தமிழ் உணர்வு மற்றும் மக்கள் பணி ஆகியவற்றை நாட்டு மக்கள், வெளிநாட்டினர் அறிந்துகொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இதற்காக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் கலை, சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ரூ.1 கோடி வைப்புத் தொகையில் தொடங் கப்படும்.

லண்டனின் ஆக்ஸ்போர்டு, மலேசியாவின் மலேயா, இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்டு வரும் தமிழ் ஆய்வுகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், மொழிபெயர்ப்புகள் போன்ற தமிழ் இலக்கியப் பணிகளை ஒன்றிணைக்கும் வகையில், ஆய்வரங்கு, கருத்தரங்கு, கவியரங்கு, சொற்பொழிவு, பட்டிமன்றம், இலக்கியச் சுற்றுலா, உலகத் தமிழர் கலைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.5 கோடியில் நடத்தப்படும்.

ஆங்கில மொழி அறிஞர்கள் ஆங்கிலச் சொற்களை தொகுத்து, மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். அதேபோல, தமிழிலும் ‘சொற்குவை’ என்ற திட்டம் தொடங்கப்படும்.

தமிழ் சொற்கள் தொகுப்பு

இணையதள பொது வெளி யில் உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், மொழியியல் ஆராய்ச்சியாளர் கள் பயன்படுத்தும் வகையில் தமிழ் சொற்கள் தொகுப்பு வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் பயில்பவர்களில் முதலாண்டில் 15 மாணவர்கள், 2-ம் ஆண்டில் 15 மாணவர்கள் என 30 மாணவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் கல்வி உதவித் தொகை இந்த ஆண்டுமுதல் ஆண்டுதோறும் வழங்கப்படும். இதற்கு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கப்படும்.

2,000 கோயிலுக்கு ரூ.20 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.30 கோடியே 75 லட்சத்தில் கட்டப்படும். நிதி வசதி இல்லாத 1,000 கிராமப்புறக் கோயில்களில், நடப்பு ஆண்டில் திருப்பணி, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி வழங்கப்படும். இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் இல்லாத, ஆதிதிராவிடர், பழங் குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள 1,000 கோயில்களில் நடப்பு ஆண்டில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x